திமுகவின் விலகல் எச்சரிக்கை: நாளை காங்கிரஸ் எம்.பிக்களுடன் சோனியா முக்கிய ஆலோசனை

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், போர்க் குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது. திருத்தங்களுக்கு பின் அந்த தீர்மானத்தின் மீது வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை விவாதம் நடைபெற்று ஓட்டெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் தீர்மானத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்து அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வற்புறுத்தி உள்ளார். அதாவது இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க் குற்றம் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்துமாறும், போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க சுயேச்சையான பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கும் வகையிலும் திருத்தம் செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசை வற்புறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் விடுத்த கோரிக்கைகளை அவர்கள் காற்றில் பறக்க விட்டனர்.
இதையடுத்து அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா மேற்கண்ட திருத்தங்களை கொண்டு வராவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்காது என்றும் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமை நெருக்கடியில் உள்ளது.
இலங்கை விவகாரத்தை வைத்து கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால், காங்கிரஸ் தமிழர்களுக்கு விரோதமானது என்ற முத்திரை விழ வாய்ப்புள்ளது. காங்கிரசுடன் டி.ராஜேந்தர் கூட கூட்டணி வைக்க முன் வர மாட்டார் என்ற நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் முட்டை மட்டுமே அந்தக் கட்சி வாங்க முடியும்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற பொதுக் குழுவை (எம்.பிக்கள் கூட்டம்) கூட்டியுள்ளார்.
அதில் கருணாநிதி விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எம்.பிக்களின் கருத்துகளை அவர் கேட்டறிய உள்ளார்.
மேலும் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம், இத்தாலிய கடற்படை வீரர்கள் விவகாரம் குறித்தும் சோனியா ஆலோசனை நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications