கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: மத்திய அரசு அனுமதி!
கூடங்குளம்: கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மேலும் இரண்டு அணு உலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
கூடங்குளத்தில் மொத்தம் 6 அணு உலைகள் நிறுவ இந்தியா - ரஷியா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஏற்கெனவே 2 அணு உலைகள் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் அணு உலையின் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக இந்திய அணுமின் கழக பொறியாளர்கள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
2ஆவது அணு உலையின் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் மேலும் 2 அணு உலைகளை நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், 3 மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைப்பதற்கான நிர்வாக மற்றும் நிதி ஒதுக்கீடு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், இந்திய அணுமின் கழகம் மற்றும் ரஷியாவின் அணு உலை சப்ளை நிறுவனத்துக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.20 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications