மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை: இந்திய கம்யூ, பாஜக கண்டனம்
சென்னை/டெல்லி: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டி.ராஜா கண்டனம்
சென்னையில் மு.க. ஸ்டாலின் வீட்டில் இன்று காலை சிபிஐ சோதனை நடத்தியது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டி.ராஜா, அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிய நிலையில் திடீர் என ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தியிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக அல்லது அரசியல் பழிவாங்கலுக்காக சிபிஐ என்கிற அமைப்பு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம். மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் கட்சிகளுக்கு இந்த சோதனை மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம். இந்த சோதனை பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்
தமிழக பா.ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய புலனாய்வு துறை என்பது காங்கிரஸ் புலனாய்வு துறையாக மாற்றப்பட்டுள்ளது. பொதுவாகவே சி.பி.ஐ. ஆளும் கட்சியால் எதிர் கட்சியை மிரட்ட தவறாக பயன்படுத்தப்படுவதாக பல காலகட்டங்களில் புகார் எழுத்துள்ளது. இந்த மாதிரி உயரிய அமைப்புகளை ஆளும் கட்சியினர் தங்கள் ஏவல் துறையாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க. கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. மத்திய அமைச்சரவையிலும் பங்கேற்றது. அப்போதெல்லாம் இல்லாத நடவடிக்கை இன்று காலையில் திடீரென்று வெடித்தது என்பது காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதைதான் இது காட்டுகிறது. மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்பட்டபோது ஆட்சியை காப்பாற்ற உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியையும், பகுஜன் சமாஜ் கட்சியையும் சி.பி.ஐ. மூலம் கட்டுப்படுத்தி ஆதரவைப் பெற்றனர். அதேபோன்ற ஒரு செயலைத்தான் இப்போதும் தூண்டுகிறார்கள் என்பதுதான் அரசியல் பார்வை யாளர்களின் கருத்து. இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை மத்திய காங்கிரஸ் அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications