சட்டசபையில் இருந்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

இன்று காலை சட்டசபை கூடிய போது நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய சபாநாயகர் தனபால் கேட்டுக் கொண்டார். அப்போது திமுக எம்.எல்.ஏ. மு.க. ஸ்டாலின் எழுந்து தமக்கு பேச வாய்ப்பு கோரினார்.

ஆனால் அவரது கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அவையில் இருந்து வெளியே வந்தபின் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது.

நிதிநிலை அறிக்கை இன்று படிக்கப்படுகிறது. புதிய அறிவிப்புகள் அரசின் சார்பில் செய்யப்படவுள்ளன. ஆனால் இந்த ஆண்டு- 2013 ஜனவரி மாதத்தில் மட்டும் முதலமைச்சர் பெயரால் 25-க்கு மேற்பட்ட அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. ஏன், கடந்த 14-3-2013 அன்று கூட பூம்புகாரில் 78 கோடியில் மீன்பிடி துறைமுகம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

18-3-2013 அன்று 99,329 மிக்சிகளை 12 கோடியே 36 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 44 இடங்களில் 35 கோடி ரூபாய்ச் செலவில் சொந்தக் கட்டிடம் கட்டப்போவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். 19-3-2013 அன்று முதலமைச்சர் தொகுதியான திருவரங்கத்தில் 128 கோடியில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம்- திருவரங்கம் அருகே புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்போவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

எனவே, இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையிலே இடம் பெறவுள்ள அறிவிப்புகளுக்கான அரசாணைகள் அடுத்த ஆண்டு அரசாணையாக வெளியிடப்பட்டு, ஏடுகளில் முதலமைச்சர் பெயரால் பெரிய செய்தியாக வெளிவந்து, அந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வருகிற கால கட்டத்தில் இந்த நிதி நிலை குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

எனவே, இப்போது படிக்கப்படுகின்ற நிதி நிலை அறிக்கை என்பது சடங்குக்காக நிதி அமைச்சரால் வெளியிடப்படுகின்ற ஒன்றுதான். அ.தி.மு.க. ஆட்சியில் நிதி நிலை அறிக்கை என்பதே, அதில் செய்யப்படும் அறிவிப்புகளுக்கு அந்தந்த நிதி ஆண்டுக்குள் நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டு, அறிவிப்புகளைச் செயலாக்கத்தின் மூலமாக நிறைவேற்றுவதற்காக அல்ல என்பது கடந்த இரண்டாண்டுகளாக நிரூபணமாகி இருக்கிறது.

மேலும் இந்த அரசின் நிதி நிலை அறிக்கை என்பது காலவரையறை குறிப்பிடப்படாத- வெறும் காகித அறிவிப்புகளாகவே இருப்பதால், அவை கதைக்கு உதவாது; காரியத்திற்கு ஆகாது என்பதால் இந்த அறிக்கை படிக்கப்படுகின்ற நேரத்தில் அதனைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் வெளிநடப்பு

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் பிடித்துக் கொண்டு முழக்கமிட்டனர்.

அப்போது, "இந்திய மத்திய காங்கிரஸ் அரசே, இலங்கையின் இன அழிப்புக்கு துணை போகாதே, தமிழக சட்டமன்ற தீர்மானம் பொருளாதார தடையை அமல்படுத்து, ஈழத் தமிழர் அரசியல் உரிமை நிலை நாட்ட பொது வாக்கெடுப்பு நடத்தி ஆதரவு தா, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சர்வதேச பொது விசாரணை நடத்த தீர்மானம் கொண்டுவா" என்று முழக்கமிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+