இன்று ஓட்டெடுப்புக்கு வருகிறது இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாக்கில் இந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படும் என்று தெரிகிறது.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவன்சில் மாநாடு கடந்த மாதம் 22-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இலங்கையில் தமிழர் மறுவாழ்வு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், போர் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றும் கூறி, அமெரிக்கா 2-வது தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவித்தது.
இந்த 2-வது தீர்மானத்தின் வரைவு அறிக்கையை அமெரிக்கா, கடந்த 12-ம் தேதி தாக்கல் செய்தது. அதில், இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது. சில கடுமையான வாசகங்களும் இடம்பெற்றன. இதனால் இலங்கை பீதியடைந்தது. இந்தியாவும் சங்கடமடைந்தது.
இதைத்தொடர்ந்து இந்தியாவின் மறைமுக வலியுறுத்தலின் பேரில் அமெரிக்கா தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அமெரிக்காவின் இறுதி தீர்மானம் கடந்த 18-ம் தேதி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது. அதில், வரைவு தீர்மானத்தில் இடம் பெற்ற கடுமையான வாசகங்கள் நீக்கப்பட்டு, தீர்மானமே நீர்த்து போயிருந்தது. அதன் பிறகும் மேலும் 2 முறை திருத்தம் செய்யப்பட்டது. இதனால் தீர்மானம் உப்புச் சப்பில்லாத வெற்றுத் தாள் போலாகி விட்டது தற்போது.
போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக, இலங்கை அரசே சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான விசாரணை நடத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை 10 மணிக்கு அமெரிக்க தீர்மானம் முறைப்படி அவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் அதன் மீது விவாதம் தொடங்கியது. அதன் முடிவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அனேகமாக பிற்பகலில் வாக்கெடுப்பு நடக்கலாம் என்று தெரிகிறது.
47 உறுப்பு நாடுகளை கொண்ட பேரவையில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. ஆதரவை பெருக்கி தீர்மானத்தை தோல்வியடையச் செய்ய இலங்கை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆனால் கடந்த முறைபோல் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்க தீர்மானம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications