ஈரோட்டில் மஞ்சள் மண்டியில் பயங்கர தீ: ரூ.20 லட்சம் மதிப்பு மஞ்சள் நாசம்
ஈரோடு: ஈரோட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மஞ்சள் மண்டியில் இருந்த 20 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசம் ஆனது.
ஈரோடு பார்க் ரோட்டில் ஏ.பி.மஞ்சள் மண்டி உள்ளது. இதன் உரிமையாளர் ராஜீவ் குமார் அகர்வால், இந்த மண்டியில் விவசாயிகளிடமிருந்து பாலீஷ் செய்யப்பட்ட மஞ்சளை வாங்கி அதை மீண்டும் பாலீஷ் செய்து ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்வார்கள். இந்த மஞ்சள் மண்டிக்கு 2 நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) விடுமுறை விடப்பட்டிருந்தது.
மஞ்சள் மண்டியில் 1000 மஞ்சள் மூட்டைகள் இருந்தது.ஈரோடு மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (54) என்பவர் மண்டியில் வாட்ச்மேனாக உள்ளார். வழக்கம்போல் வாட்ச்மேன் சண்முகம் பணியில் இருந்தார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மின்தடை ஏற்பட்டது.
மீண்டும் 2.50க்கு மின்சாரம் வந்தபோது, மஞ்சள் மண்டி அருகே உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக இருந்த ஒருவர், மஞ்சள் மண்டி வாட்ச்மேன் தங்கவேலுவிடம் மண்டியில் இருந்து புகை வருவதாக கூறியுள்ளார். சண்முகம் மூலம் விபரம் அறிந்த உரிமையாளர், விரைந்து வந்தார்.
இதற்கிடையே அந்த மஞ்சள் மண்டியில் இருந்த மஞ்சள் மூட்டைகளில் தீபிடித்து, குபு...குபு...வென கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலை அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். மேலும் கோட்ட தீயணைப்பு அலுவலர் மதியழகனும் வந்தார்.
மஞ்சள் மண்டி பெரும் பகுதி தீபிடித்து எரிந்ததால் ஈரோட்டிலிருந்து 2 வண்டி, மொடக்குறிச்சியிலிருந்து 1 வண்டி, பவானியில் இருந்து 1 வண்டி என 4 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். அதிகாலை 3 மணியிலிருந்து 8 மணி வரை சுமார் 5 மணி நேரமாக போராடி ஒரு வழியாக தீயை கட்டுப்படுத்தினர்.
இதில் 200 மூட்டைகளில் உள்ள மஞ்சள் முழுவதும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். மஞ்சள் மண்டி குருகலான இடத்தில் இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் துரிதமாக செயல்பட முடியவில்லை, ஒருவழிபாதை வழியாகத்தான், தீயை அணைக்க முடிந்தது என கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் மஞ்சள் மண்டியின் மீது ஏறி மேற்கூரையை உடைத்து உள்ளே குதித்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்துள்ளனர். மஞ்சள் மண்டியில் பாலீஸ் செய்யப்படும் இடத்தில் உள்ள குப்பையில் முதலில் தீப்பிடித்து படிப்படியாக பரவி மஞ்சள் மண்டி முழுவதும் பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
தீவிபத்து எதனால் ஏற்பட்டது? மின்கசிவு தான் காரணமா? அல்லது வேறு சதி வேலையா? என்பது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மஞ்சள் மண்டியில் பிடித்து எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீ விபத்தால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications