காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை: ஸ்டாலின்

குன்றத்தூர் அருகே உள்ள நல்லூரில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகம், புதுவை உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காஞ்சீபுரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்து முடிந்துவிட்டது. தற்போது நல்லூரில்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தா.மோ. அன்பரசன் சிறப்பாக செய்துள்ளார். மாநாடு போன்று பெருந்திரளாக கழக நிர்வாகிகள் திரண்டு வந்துள்ளீர்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் உழைப்பை காட்டி வெற்றியை தேடித்தர வேண்டும். இலங்கை விவகாரத்தில் நாம் கூறிய திருத்தங்களை செய்ய மத்திய அரசு தவறிவிட்டது.
தமிழர்களின் உணர்வுகளை மதிக்காததால் மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியது. கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் சிபிஐயை வீட்டுக்கு அனுப்புகின்றனர். இதனால் பயந்துபோய் நாங்கள் ஒன்றும் வீட்டிலேயே முடங்கிவிட மாட்டோம்.
மிசா போன்ற சட்டங்களால் திமுக நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்டனர். எதற்கும் அஞ்சாத இயக்கம் திமுக. சிபிஐயை பார்த்தா திமுகவினர் அஞ்சப் போகின்றனர்? எதையும் நாங்கள் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம். இலங்கை பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் கலைஞர்.
ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தியது திமுக. கடந்த 2002ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இலங்கை தமிழர்களுக்காக போராடி, குரல் கொடுத்ததற்காக 2 தடவை ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கை தமிழர்களை காப்பாற்றாமல் காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது. தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை. திமுக ஆட்சியில் 1 அல்லது 2 மணிநேரம் மட்டும் தான் மின்தடை இருந்தது. அதற்கே ஆட்சியை மாற்றிய நீங்கள் தற்போதுள்ள 18 மணிநேர மின்தடை பற்றி அதிமுகவை என்னென்ன கேள்விகள் எல்லாம் கேட்கிறீர்கள் என்று தெரிகிறது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை மாற்றுவது தான் ஜெயலலிதா அரசின் சாதனை. எந்த அரசிலும் குறுகிய காலத்தில் இத்தனை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை.
அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எந்த பெரிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை. இதனால் அக்கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். 40 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்றார்.
நிகழ்ச்சியில் ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. யானை வரவழைக்கப்பட்டு ஸ்டாலினுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications