சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கு: பி.ஜே.குரியனுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் சூரியநெல்லி பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிலர் கடத்திச் சென்றனர். அச்சிறுமியைப் பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். இதில் 40 பேர் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக போலீஸில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து 40 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் செய்தவர்களில் பி.ஜே.குரியனும் ஒருவர் என்று அந்தப் பெண் தெரிவித்தபோதிலும் அவரது பெயரை இவ்வழக்கில் போலீஸார் சேர்க்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்மராஜன் சமீபத்தில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 1996ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி அந்தச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விருந்தினர் மாளிகைக்கு பி.ஜே.குரியனுடன் தானும் சென்றதாகக் கூறியிருந்தார்.
அவரது பேட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்த பாதிக்கப்பட்ட பெண், குரியன் மீது கோட்டயம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். ஆனால் அந்தப் புகார் பதிவு செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் பீர்மேடு நகர முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இம்மாதம் 1ஆம் தேதி குரியன் மீது புகார் அளித்தார். இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரியிருந்தார். எனினும் அந்தப் பெண்ணின் மனுவை பீர்மேடு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதை எதிர்த்து அந்தப் பெண் தொடுப்புழா செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஆப்ரகாம் மேத்யூ, இவ்வழக்கு தொடர்பாக குரியன், தர்மராஜன், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜமால், உன்னிகிருஷ்ணன் ஆகியோருக்கும் கேரள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு புதன்கிழமை உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை மே மாதம் 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது பி.ஜே.குரியனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications