மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை
கோவை: மது அரக்கனின் கொடூரக் கரங்களில் ஒருவர் சிக்கினால் என்னாகும் என்பதற்கு இதோ இன்னொரு பரி்தாப உதாரணம். மது அருந்திய மயக்கத்தில் தாயும், தந்தையும் மயங்கிப் போய்க் கிடக்க அவர்கள் பெற்ற 2 வயதுக் குழந்தை திக்கு திசை தெரியாமல் நெடுஞ்சாலையில், நள்ளிரவு நேரத்தில் தனியாக நடந்து சென்று தவிக்கும் நிலை ஏற்பட்டது.
கோவை சரவணம்பட்டி.. அது சத்தி செல்லும் சாலை. அந்த சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் ஒரு ஆண் குழந்தை அழுதபடி நடந்து சென்று கொண்டிருந்து. யாருமே இல்லாத அந்த சாலையில் ஒற்றை ஜீவனாய் போய்க் கொண்டிருந்தது அக்குழந்தை.
சாலையோரமாக கல்லும், முள்ளுமாக, மேடும் பள்ளமுமாக இருந்ததால், குழந்தை இருட்டில் தட்டுத் தடுமாறி கீழே விழுந்து போய்க் கொண்டிருந்தான். அந்த சமயத்தில், பண்ணாரியிலிருந்து கோவை சென்ற ஒரு பேருந்தில் பயணித்த ஒரு பயணி இந்தக் குழந்தையைப் பார்த்து விட்டு சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினார்.
அதன் பின்னர் அனைவரும் இறங்கி ஓடி வந்தனர். குழந்தையிடம் விரைந்து சென்றனர். அழுதபடி இருந்த அக்குழந்தை, தன்னை நோக்கி ஓடி வந்தவர்களிடம், தன்னைத் தூக்குமாறு கூறி கையை உயர்த்திக் காட்டினான். பேசத் தெரியவில்லை,. காலில் கற்கள் குத்தியதில் ரத்தம் கொட்டி, சதை கிழிந்து காணப்பட்டது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். குழந்தை நடந்து வந்த பாதையில் போலீஸார் சென்று சோதனையிட்டனர். அப்போது சாலையோரமாக இருந்த கோவில் வளாகத்தில் ஒரு தம்பதியினர் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. அவர்களை நெருங்கியபோது இருவரும் நல்ல மது போதையில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களை போலீஸார் தட்டி எழுப்பி விசாரித்தபோது, தட்டுத் தடுமாறி நடந்து வந்த குழந்தை அவர்களுடையதுதான் என்று தெரிய வந்தது.
அழுதபடி சாலையில் திரிந்த அந்த பரிதாபக் குழந்தையின் பெயர் சந்தோஷ். இவனது தந்தை பிளாஸ்டிக், இரும்புப் பொருட்களை சேகரித்து விற்று பிழைத்து வருகிறார். சாலையில்தான் குடித்தனம். சந்தோஷின் தாயும், தந்தையும் குடிப்பழக்கம் கொண்டவர்கள்,. தினசரி குடிப்பார்கள். சம்பவ தினத்தன்றும் நன்கு குடித்து விட்டு மயக்கமாகி படுத்து விட்டார்கள். குழந்தை தனியாக போய் விட்டது.
பொறுப்பற்ற அந்த தம்பதியிடம் குழந்தையை ஒப்படைத்த போலீஸார் இனிமேல் இப்படி இருக்காதீர்கள் என்றும் அறிவுரை வழங்கி அனுப்பினர்.












Click it and Unblock the Notifications