ஸ்டெர்லைட் விவகாரம்: விஷவாயுவைப் பற்றி கவலையில்லை… 2,000 பேர் தான் முக்கியம்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயு வெளியானதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை... 2 ஆயிரம் பணியாளர்களின் வாழ்க்கைதான் முக்கியம் எனவே தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆதரவுக்குழுவினர் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி அதிகாலை ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியான சல்பர்டை ஆக்சைடு காற்றில் கலந்தது. இந்த விஷ வாயுவை சுவாசித்த மாநகர மக்கள் கண்எரிச்சல், நெஞ்சு எரிச்சல், மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு போன்ற பிரச்சனைக்கு ஆளாகினர்.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரத்தரமாக மூடவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 30ம் தேதி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மூடக்கோரி திங்கட்கிழமை தூத்துக்குடி மாநகரில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன்காரணமாக தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததுடன், வாடகை ஆட்டோ, கார், வேன் மற்றும் ஷேர்ஆட்டோ, மினிபஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் ஆதரவுக்குழு சார்பில் மகளிர் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் சார்பில் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுவேலைநிறுத்தத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் எங்கள் ஒப்பந்த பணியாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் கடன் வாங்கி இறக்குமதி செய்த ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட வாகனங்கள் பயனின்றி கிடக்கின்றன. எனவே ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
அப்போது பத்திரிக்கையாளர்கள் கடந்த 23ம் தேதி நடந்த விஷவாயு சம்பவத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தங்களின் கருத்து என்ன என்று கேட்டதற்கு அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எங்களை பொறுத்தவரை ஸ்டெர்லைட் தொழிற்சாலை பாதுகாப்பாகத்தான் செயல்படுகிறது. எனவே தமிழக அரசு தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் எங்களின் கருத்து என்றார்.
எங்களை பொறுத்தவரை 2ஆயிரம் பணியாளர்கள் தான் முக்கியம், 2லட்சம் மக்களை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் ஒப்பந்தக்காரர்கள் அளித்துள்ள பேட்டி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications