மங்களூர் அருகே எல்பிஜி டேங்கர் லாரியில் தீ... 8 பேர் பலி, 6 வீடு, 2 கடை நாசம்
மங்களூர்: மங்களூர் அருகே எல்பிஜி டேங்கர் லாரியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 பேர் உயிருடன் கருகி பரிதாபமாக பிணமானார்கள். 6 வீடுகள், 2 கடைகள், ஒரு மெக்கானிக் காரேஜ் ஆகியவையும் இதில் கருகிப் போயின.
தீவிபத்தில் சிக்கி 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மங்களூரிலிருந்து பெங்களூருக்கு இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டேங்கர் லாரியொன்று எல்பிஜியுடன் கிளம்பியது.
பெனே என்ற இடத்தில் லாரி வந்துபோது திடீரென அதில் தீப்பிடித்துக் கொண்டது. டேங்கர் லாரி வெடித்துச் சிதறி சின்னாபின்னமானது.
இதில் அந்த இடத்திற்கு அருகே இருந்த நான்கு ஏக்கர் பாக்குத் தோட்டம் முற்றிலும் கருகிப் போநது. 6 வீடுகள், இரண்டு கடைகள், ஒரு காரேஜ் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. இது போக ஒரு வேன், ஒரு காரும் எரிந்து போயின. இந்த கோர விபத்தில் லாரி டிரைவர் செல்வராஜ் மற்றும் 38 வயது வனிதா, அவரது 5 வயது மகன் சித்ரேஷ், 40 வயது ஷோபா ரை, 30 வயது குருவப்பா, 6 வயது சுனில், 38 வயது கதீஜாம்மா, வேன் டிரைவர் 40 வயது வசந்த் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் அத்தனையும் நடந்து முடிந்து விட்டது. அந்த இடமே தீக்கிரையாகிப் போய் விட்டது. இதுவரை இப்படி ஒரு தீவிபத்தைப் பார்த்ததே இல்லை என்றார்.
தீவிபத்தில் சிக்கிய லாரியில் 16,000 லிட்டர் எல்பிஜி இருந்தது. லாரி விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததைத் தொடர்ந்து அதிலிருந்து காஸ் லீக் ஆக ஆரம்பித்தது. அதன் பிறகு தீப்பிடித்து லாரி சிதறிப் போனது.












Click it and Unblock the Notifications