ஸ்டாலினுக்கு முட்டுக்கட்டை போட கரம் கோர்க்கும் அழகிரி-கனிமொழி!

இனநலனுக்காக உருவானது திராவிட முன்னேற்றக் கழகம். ஒரு காலத்தில் ஐம்பெருந் தலைவர்கள், மூத்த தலைவர்கள், மிகச் சிறந்த பேச்சாளர்கள் என பெரும்பட்டாளமே தலைவர்களாகவே வலம் வந்த காலம் திமுகவுக்கு இருந்தது. பத்திரிகைகள், மாவட்டங்களில் சிம்ம சொப்பமான கொள்கை முரசறையும் பாசறைத் தலைவர்கள் என திமுகவின் கொடி பட்டொளி வீசிய காலம் ஒன்று இருந்தது
காலம் கரைய கரைய... திமுகவின் அத்தனை கடந்த கால முகங்களும் தொலைந்து போயின.. தலைவர்களின் முகங்கள் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்டு கருணாநிதியை முதன்மைப்படுத்தியே 70களுக்குப் பிந்தைய திமுக வளரத் தொடங்கியது.
1980களில் இதில் கருணாநிதியைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலினின் வரவும் 90களில் மு.க.அழகிரியின் வரவும் இடம் பிடித்துக் கொள்ள கருணாநிதி அவருக்குப் பின் அவரது குடும்பத்தினரின் ஆளுகையின் கீழ் திமுக சென்றது. இதில் 2000-ம் ஆண்டுகளில் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோரது வருகையும் இணைந்து கொள்கிறது.
மு.க.ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின்
திமுக தலைவராக கருணாநிதி இருக்கும் போதே தம்மை கட்சியின் தலைவராக்கிவிட வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினின் தீவிர முயற்சி.. இதற்கு ஆதரவாக கருணாநிதியும் அவ்வப்போது சிக்னல்கள் கொடுத்து உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறார். இது அவரது மற்ற வாரிசுகளுக்கு உறுத்தலாகவே இருந்து வருகிறது. இதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாத மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தலைவர் காலத்திலேயே ஸ்டாலின் ...ஸ்டாலின்.. .ஸ்டாலினுக்கு மட்டுமே செல்வாக்கு, அணி என திமுகவில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார்.
துர்கா ஸ்டாலினின் இந்த உறுதியான நிலைப்பாடுதான் ஸ்டாலினுக்கு எதிரான குஷ்பு பேட்டியின் போதான தாக்குதல்களாக வெடித்தன.
மு.க. அழகிரி
மு.க. ஸ்டாலினை திமுக தலைவராக முன்மொழிவேன் என்று பகிரங்கமாக கருணாநிதி அறிவித்த போது அதை பகிரங்கமாகவே எதிர்த்தவர் அழகிரி. மத்தியில் அழகிரி அமைச்சராக்கப்பட்ட உடனே தம்மை துணை முதல்வராக்கிவிட வேண்டும் என்பதில் துடியாய் துடித்தவர் ஸ்டாலின். இதன் உச்சம்தான் மத்திய அரசில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்ட விவகாரத்தில் அழகிரி நடந்து கொண்டவிதம்.
மத்திய அரசில் இருந்து விலகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் மு.க. அழகிரி. ஆனால் மத்திய அரசில் இருந்து வெளியேறியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் மு.க. ஸ்டாலின். ஸ்டாலின் முடிவெடுத்து அதை கருணாநிதி செயல்படுத்துவதா? எனக்கும் ஒரு கருத்து இருக்கிறதே என்று கங்கணம் கட்டிக் கொண்டு காங்கிரஸ் முகாமுக்குள் சென்று சந்திப்புகளை நடத்தி திரும்பிப் பார்க்க வைத்தவர் அழகிரி.
கனிமொழி
மு.க.அழகிரியைப் போலவே மத்திய அரசில் இருந்து வெளியே வரக் கூடாது என்று விரும்பியவர் கனிமொழி எம்.பி. இதே கனிமொழிதான் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தினால் என்ன தவறு? அவரை தலைவராக வழிமொழிவேன் என்று கருணாநிதி அறிவித்த போது ஓடோடிப் போய் ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்லி தம்மை ஸ்டாலின் அணியாக காட்டிக் கொண்டவர்.
ஆனால் ஸ்டாலின் எடுத்த சில நடவடிக்கைகள், கனிமொழியை அவரது அணியிலிருந்து விரைவாகவே விரட்டியடித்துவிட்டது.
கனிமொழியின் பொறுப்பிலிருக்கும் கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பின் சார்பில் திருவள்ளூரிலும் திண்டிவனத்திலும் பொதுக் கூட்டம் நடத்த முயன்றார். ஆனால் கனிமொழியை இம்மியளவும் வளரவிடக் கூடாது என்ற துர்கா ஸ்டாலினின் உறுதியானது அந்த இரண்டு கனிமொழி கூட்டங்களையும் ஸ்டாலினை ரத்து செய்ய வைத்தது. இதனால்தான் கோபத்தில் இருந்த கனிமொழி மதுரையில் தமது ஆதரவாளரின் திருமணத்தில் கலந்து கொள்வதாகக் கூறி மு.க. அழகிரியுடன் கை கோர்த்திருக்கிறார். அழகிரியுடன் இரண்டரை மணி நேரம் மனம்விட்டு பேசிய இருவரும் கரம் கோர்த்திருக்கின்றனர். இந்த புதிய கூட்டணி திமுகவில் இன்னும் என்னென்ன களேபரங்களை விதைக்கப் போகிறதோ?












Click it and Unblock the Notifications