For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக கொண்டு வந்த குடிநீர்த் திட்டங்களை அதிமுக கொண்டு வந்ததாக கூறுகிறாரே ஜெயலலிதா: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பெரும்பாலான குடிநீர்த் திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டன என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இத்திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று அத்துறையின் அமைச்சரும் பதிலளித்து விட்டார்.

அப்போது வெளியிட வேண்டிய அறிவிப்புகளை ஏப்ரல் 10ம் தேதி 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகக் கூறியுள்ளார். ராமநாதபுரத்தின் வறட்சியைக் கணக்கில் கொண்டு 1996-ல் திமுக ஆட்சியில் ரூ. 72.20 கோடியில் உவர் நீரை நன்னீராக்கும் 11 திட்டங்களைச் செயல்படுத்தினோம். இதன் மூலம் 237 கிராமங்கள் குடிநீர் வசதியைப் பெற்றன.

ரூ. 671 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 30-1-2007-ல் பரமக்குடியில் நடைபெற்ற விழாவில் நான் அடிக்கல் நாட்டினேன்.

இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிகள், மண்டபம், சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய போரூராட்சிப் பகுதிகளுக்கும் 27-6-2009-ல் குடிநீர் வழங்கப்பட்டன.

2வது கட்டமாக இத்திட்டத்தின் வழியோரப் பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 குடியிருப்புகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 799 குடியிருப்புகளுக்கும், ராமநாதபுரத்தின் ஊரகப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டன.

மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சியில் 1971ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டது. 1995-96ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குடிநீர் வழங்கும் பணிகளுக்காக ரூ. 213.82 கோடி செலவிடப்பட்டது. ஆனால், 2000-01-ல் திமுக ஆட்சியில் குடிநீர் பணிகளுக்காக ரூ. 842 கோடி ஒதுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக ஆட்சியில் ரூ. 51 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு, 27-6-1999-ல் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், இது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

கிருஷ்ணா குடிநீர்த் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகள் திமுக ஆட்சியில்தான் நடைபெற்றன. மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அது திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.

நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆனாலும் இத்திட்டத்தின் பெருமளவு பணிகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன.

எல்லாப் பெருமைகளையும் முதல்வர் ஜெயலலிதா தேடிக் கொள்ள முயன்றாலும் திட்டங்களின் பயன்களை அனுபவித்து வரும் மக்களுக்கு உண்மை தெரியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi told that CM Jayalalithaa is boasting of certain drinking water projects introduced by DMK as ADMK's.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X