விஜயகாந்த் என்னை நலம் விசாரித்த போது.....: கருணாநிதி ரிலீஸ் செய்த போட்டோ
சென்னை: "தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இல்லத்திற்கு செல்லும்போது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் என்னை நலம் விசாரித்தபோது.. "என்ற பதிவோடு ஃபேஸ்புக்கில் இருவரும் வணக்கம் செலுத்திக் கொண்ட புகைப்படத்தை திமுக தலைவர் கருணாநிதியே வெளியிட்டுள்ளார்.
தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனின் உடலுக்கு போய்ஸ் தோட்டத்து இல்லத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் வெளியில் காத்திருந்தார். அப்போது எதிரே திமுக தலைவர் கருணாநிதி காரில் வந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரிலிருந்த கருணாநிதிக்கு விஜயகாந்த் வணக்கம் செலுத்த கருணாநிதியும் பதில் வணக்கம் செலுத்தினார். அப்போது, தி.மு.க., துணை பொதுச் செயலர் துரைமுருகன் உடனிருந்தார்.

ராஜ்யசபா தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் தொடர்பாக திமுக- தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படும் நிலையில் இரு கட்சித் தலைவர்களும் மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அத்துடன் இந்த புகைப்படத்தை திமுக தலைவர் கருணாநிதியே தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருப்பதால் திமுக அணியில் தேமுதிக இடம்பெறுவதை உறுதி செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
