மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியை குறிப்பிட தமிழக அரசு முடிவா? பிரின்ஸ் கஜேந்திரபாபு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு மாணவருக்கு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் அடையாள அட்டையில் சாதியை குறிப்பிடுவது இந்திய சமூக இழுக்கை சுமந்துகொண்டு திரிய வேண்டிய அவசியத்தை மாணவர்களுக்கு உருவாக்குவது ஆகும். சாதி வெறிக் கூட்டத்திற்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது" என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, "பள்ளிக்கு செல்கிற குழந்தைகள் அனைவருக்குமே ஆண்டுதோறும் சாதி சான்றிதழை வாங்குவதற்கு மாற்றத்தை உருவாக்குதற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். அவர்களுக்கு அடையாள அட்டை ஒன்றை வழங்க முடிவு செய்துள்ளோம். அதில் மாணவர்களுடைய முகவரி, சாதி சான்றிதழ், ரத்த வகை, ஆதார் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை இணைக்கப்படும். 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு முதற்கட்டமாக வழங்க உள்ளோம்" இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

The Tamil Nadu government has decided to mention caste on students identity cards

முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட பதிவில், "ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை.. தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது "ஒரே நாடு ஒரே அடையாள அட்டை" என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது" என்று கூறியிருந்தார்.

அதேபோல் கல்விச் செயற்பாட்டாளரான பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் மாணவர்களுக்கான அடையாள அட்டை, அவர்கள் எந்த கல்வி நிறுவனத்தில் படிக்கின்றனர், அவர்களின் படிப்பு விவரம், பிறந்த தேதி, அவசரத் தேவைக்கு அவர்களின் இரத்த வகை மற்றும் உடனடி தொடர்பு விவரம் ஆகியவை மட்டுமே இடம் பெறுவது வழக்கம். இந்த விவரத்தில் கூட சிலவற்றை தவிர்ப்பார்கள்.

எந்த காரணத்தைக் கொண்டும் அவர்களின் சாதியையோ மதத்தையோ குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் நோக்கத்திற்காகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட‌ வேண்டிய உரிமைகளுக்கான கணக்குகளுக்காக மட்டுமே மதம் மற்றும் சாதி விவரங்கள் சேர்க்கையின் போது கோரப்படும். இந்த விவரங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் அலுவலகத்தில் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும். வருகைப் பதிவேடு உள்ளிட்ட வகுப்பறைப் பதிவேடுகளில் கூட இத்தகையத் தகவல் தேவையற்றது.‌

சமூகம் மற்றும் கல்விப் பின் தங்கல் காரணமாக காலம்காலமாக ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகங்கள் பெற வேண்டிய முன்னுரிமைக்காக வருவாய்த்துறை வழங்கிடும் சான்றிதழ் சாதி சான்றிதழ் அல்ல.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14 மற்றும் 21 உத்தரவாதப்படுத்தும் உரிமைகள் முழுமையாக அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், சமூக மற்றும் கல்விப் பின்தங்கலுக்கு உள்ளான மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு தேவைகளில் முன்னுரிமை வழங்கிட வேண்டும். அதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 15 மற்றும் 16 வழங்கியுள்ள‌ உரிமையை பெறுவதற்காக வழங்கப்படும் சான்றிதழை சாதிச் சான்றிதழ் என்று புரிந்துக் கொள்வதே தவறானதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மக்களின் வாழ்வியலாக அமையும் வரையில் இந்திய அரசமைப்புச் சட்டம் உத்திரவாதப்படுத்தும் சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் அடையும் வரையிலும் இத்தகைய சான்றிதழ் வழங்கப்படும்.

சமூக மற்றும் கல்விப் பின்தங்கலுக்கு உள்ளான மக்களுக்கு தொடக்கப் பள்ளி சேர்க்கையின்போது மக்களின் சமூக ஒடுக்குமுறையின் அளவின் அடிப்படையில் வருவாய்த் துறை வழங்கும் சான்று நிரந்தச்சான்றிதழ். ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு இருக்க அடையாள அட்டையில் இந்த விவரம் எதற்கு? அடையாள அட்டையை ஸ்கேன் செய்து இந்த விவரத்தை யார்? எதற்காக தெரிந்துக் கொள்ள வேண்டும்?

நாடு விடுதலை அடைந்து, சட்டத்தின் ஆட்சி நடைமுறைக்கு வந்து, எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்த பின்னர் கூட சமூக சமத்துவத்தை அடைய முடியவில்லை என்பது நமது சமூகம் பண்பாட்டு ரீதியாக இன்னும் முன்னேறவில்லை என்பதன் வெளிப்பாடு. இதற்கு வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டும்.

ஒவ்வொரு சாதியும் மற்ற சாதிகளுக்கு தீண்டத்தகாதது என்பதால்தான் எந்த சாதியினரும் மற்ற எந்த சாதியினருடனும் திருமண உறவு வைத்துக்கொள்வதில்லை. தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டதே சாதி.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 17-ன் படி தீண்டாமையின் விளைவாக உருவாகும் எந்த செயலின்மையும் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்ட சாதியை பின்பற்றுவது சட்டப்படி குற்றமே‌. ஒரு மாணவருக்கு பள்ளி, கல்லூரி , பல்கலைக்கழகங்களின் அடையாள அட்டையில் சாதியை குறிப்பிடுவது இந்திய சமூக இழுக்கை சுமந்துகொண்டு திரிய வேண்டிய அவசியத்தை மாணவர்களுக்கு உருவாக்குவது ஆகும்.

சாதி வெறிக் கூட்டத்திற்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது" என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இதனிடையே இதுபற்றி விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், "அது தவறான செய்தி..." மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஜாதி சான்றிதழ் எப்போதும் இனைக்கப் போவதில்லை.. பிளட் குரூப், ஆதார் ஆவணங்கள் மட்டுமே அந்த அடையாள அட்டையில் இருக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+