Vijay: முட்டி போட்டபடியே அமர்ந்து பூர்ணிமாவுக்கு ஆறுதல் சொன்ன விஜய்! வெளியே வரும் போது கண்களில் நீர்!
சென்னை: நடிகர் பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் விஜய், சாந்தனுவை கட்டி அணைத்து ஆறுதல் தெரிவித்தார். அது போல் கதறி அழுத பூர்ணிமா அருகே சென்ற விஜய், அவரது பக்கத்தில் முட்டி போட்டபடி அமர்ந்து ஆறுதல் தெரிவித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பாக்யராஜின் குருநாதர் பாரதிராஜா காலமானதும் பாக்யராஜ் உடைந்து போய்விட்டார். இதுவரை பாரதிராஜா என்று எங்குமே குறிப்பிடாமல் இயக்குநர், குருநாதர் என்றே அழைத்திருக்கிறார்.

பாரதிராஜா இறந்ததும் அவரது உடல் தேனியில் நல்லடக்கம் செய்யப்படும் வரை பாக்யராஜ் சோகத்தில் மூழ்கியிருந்தார். அந்த காரியங்களை முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பிய போதும் பாரதிராஜாவின் மறைவிலிருந்து அவரால் மீள முடியவில்லை என்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வள்ளுநர் கோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டாராம். அப்போது வீடு திரும்பிய அவர் தனக்கு லேசாக நெஞ்சு வலிக்கிறது என கூறி சோஃபாவில் அமர்ந்தாராம்.
அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மயங்கிய நிலையில் சுயநினைவை இழந்து காணப்பட்டாராம். அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
பாக்யராஜின் இறப்புக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பாக்யராஜின் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கே.பாக்யராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
பாக்யராஜின் உடலுக்கு நாளை இறுதி சடங்குகள் பெசன்ட் நகரில் நடைபெறுகின்றன. இந்த நிலையில் விஜய், பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தார்.
அப்போது அவர் சாந்தனுவை கட்டி அணைத்து ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து விஜய்யை பார்த்ததும் கதறி அழுத பூர்ணிமாவையும் கட்டி அணைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். பூர்ணிமா நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் அருகே சென்ற விஜய், நாற்காலிக்கு இணையாக முட்டி போட்டு அமர்ந்து பூர்ணிமாவுக்கு ஆறுதல் தெரிவித்தார். அது போல் மகள் சரண்யாவுக்கும் விஜய் ஆறுதல் தெரிவித்தார். வெளியே வரும் போது அவரது கண்கள் கலங்கியிருந்தன.












Click it and Unblock the Notifications