பாலியல் குற்றங்கள் தேசத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது: பிரணாப் முகர்ஜி

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதில் பாலியல் குற்றங்கள் குறித்து பின்வருமாறு கூறியதாவது,
‘பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது தாக்கப்படுவது போன்ற சீர்கேடான குற்றச்செயல்களுக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டிய அவசிய நிலையில் நாடு உள்ளது. நல்லொழுக்க கல்வி மூலமாக இத்தகைய பிரச்சினைகளை அகற்றுவது குறித்த ஆலோசனைகளை கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். சமீபகாலமாக நடக்கும் சம்பவங்கள் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பதில் தோல்வியை சந்திக்கும் துரதிருஷ்டவசமான இந்த நிகழ்வுகளை படிப்படியாக குறைப்பதற்கு ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய கட்டத்தில் உள்ளோம்.
இந்த குற்ற சீர்கேடுகள் சமூக செயல்பாட்டுக்கு மிரட்டல் விடுப்பதாக உள்ளது. இதற்கு பின்னணியில் உள்ள காரணங்களை களைவதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம். பெண்களை மதிக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டும். இதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்கள், இளைஞர்களை பொறுப்பு உள்ளவர்களாக உருவாக்க வேண்டும். நமது பல்கலைக்கழகங்கள் கல்வி நிறுவனங்கள் இதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு, உரிய தீர்வுகளை தெரிவிக்க வேண்டும். அது மனித ஒழுக்கத்தையும் சமத்துவத்தையும் உயர்த்துவதற்கு உதவி செய்யும்' என இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
ஒடிசா மாநில கவர்னர், முதல்-மந்திரி மற்றும் கல்வியாளர்கள் முதலானோர் விழாவில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications