மரக்காணத்தில் தலித் குடியிருப்புகளை தாக்கிய பாமகவினர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: சிபிஎம் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமல்லபுரம் சம்பவம் தொடர்பாக வழக்கு பதி்வு செய்துள்ள காவல்துறை இது வரை ஏன் யாரையும் கைது செய்யவில்லை என சிபிஎம் கேள்வி எழுப்பியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு வாகனங்களில் வருகை தந்த பாமக தொண்டர்கள் பாண்டிச்சேரியை அடுத்து வழி நெடுகிலும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். வழியில் சென்றவர்கள் மீது மது பாட்டில்கள் வீசித் தாக்கப்பட்டுள்ளார்கள்.

மரக்காணத்தை அடுத்த கடையன் தெரு என்ற தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் சில வீடுகளில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் சிலர் காயமடைந்துள்ளனர்.

இது மட்டுமின்றி அரசுப் பேருந்துகள், காவல் வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் உள்ளன. இதன் காரணமாக இப் பகுதி முழுவதும் பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.

ஏற்கனவே தர்மபுரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வலியும், வேதனையும் அடங்குவதற்குள்ளே மீண்டும் தற்போது வன்முறைச் சம்பவம் நடத்தப்பட்டு தலித் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையும் அளிக்கிறது. இத்தகைய தாக்குதல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

நடைபெற்றுள்ள சம்பவங்கள் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறு சாதிக் கலவரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது காவல்துறை தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்திட முடியும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

கடந்தாண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக விழாவில் பேசிய பேச்சுக்கள் தான் தர்மபுரிச் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்பது அறிந்ததே. மீண்டும் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவிலும் தலித் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதற்கும், அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தன்மையில் பேச்சுக்கள் அமைந்துள்ளது கண்டிக்கத்தகுந்ததாகும்.

சமூக நீதி பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் சாதிக் கலவரத்தை திட்டமிட்டு உருவாக்க முனைவதை அனுமதிக்கக்கூடாது. தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, நலனை காக்க சாதி வித்தியாசமில்லாமல் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரத்தில், உழைப்பாளி மக்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களிடையே மோதலை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் சக்திகள் மீதும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும், தமிழக மக்களும் இத்தகைய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு இரையாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும், அமைதி காக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+