அறிவுநிதி மீது வழக்குப் பதிவு செய்யும் போலீசார்?

சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தினமும் நடைபெறுகிறது. கடந்த திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் முக முத்துவின் மனைவி சிவகாமசுந்தரி கலந்து கொண்டு மனு ஒன்றை கொடுத்தார். அதில், எங்களது மகன் அறிவுநிதி, நாங்கள் குடியிருந்து வந்த கோபாலபுரம் வீட்டை வஞ்சகமாகப் பேசி அபகரித்துக் கொண்டார். அதனால் நாங்கள் கஷ்டப்படுகிறோம். மேலும் அறிவுநிதி எங்களுக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கிறார். எனவே அவரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு போலீசாரிடம் கொடுத்ததாகக் கூறி சிவகாமசுந்தரி பத்திரிக்கையாளர்களிடம் ஒரு மனுவை அளித்தார். ஆனால் முக முத்து எழுதிக் கொடுத்துவிட்ட மற்றொரு மனுவை அவர் பத்திரிக்கையாளர்களிடம் மறைத்துவிட்டார் என்றும், அதை போலீசாரிடம் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
2 மனுக்களை பெற்ற கூடுதல் காவல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவம் அவை குறித்து விசாரிக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் புகார் கொடுக்கப்பட்ட சில மணிநேரத்தில் பத்திரிக்கை அலுவலகங்களுக்கு முக முத்து சார்பில் மறுப்பு அறிக்கை ஒன்று வந்தது. அதில், தனது மனைவிக்கு மறதி நோய் இருப்பதால் அவர் கொடுத்த புகார் செய்தியை பிரசுரிக்க வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கையில் முக முத்து எழுதிய கொடுத்தனுப்பிய மனு குறித்த தகவல் இல்லை.
சிவகாமசுந்தரி மனு கொடுத்துவிட்டுச் சென்ற சில மணிநேரத்திலேயே முக முத்து மறுப்பு அறிக்கை அளித்தது போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. இகையடுத்து அவர் சிவகாமசுந்தரியின் மனுவை விட்டுவிட்டு முத்துவின் மனுவை ஏற்று விசாரணையை துவங்கினர்.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முக முத்து மற்றும் அவரது மனைவியிடம் நேற்று முன்தினம் விசாரித்தனர். விசாரணையின்போது முத்து தனது மகன் அறிவுநிதி தங்களை ஏமாற்றி வீட்டை வாங்கிக் கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் தான் அனுப்பிய மறுப்பு அறிக்கை தனது குடும்பத்தாரால் கட்டாயப்படுத்தி கையெழுத்துப் போடவைத்து அனுப்பப்பட்டதாக முத்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் குடும்பத்தினர் என்று கூறியுள்ளது அவரது தந்தை கருணாநிதியையா என்பதை தெளிவுபடுத்த போலீசார் மறுத்துவிட்டனர்.
முக முத்து கொடுத்த புகாரின்பேரில் அறிவுநிதி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து பெருநகர காவல்துறை அரசு சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் முக முத்துவை வலுக்கட்டாயமாக மறுப்பு அறிக்கையில் கையெழுத்து போட வைத்தது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டாயப்படுத்தியவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யக்கூடும் என்று தெரிகிறது.
இதற்கிடையே முத்துவை கருணாநிதி குடும்பத்தார் சமாதானப்படுத்தி அவர் கொடுத்த புகாரை வாபஸ் பெற வைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications