ஊடுருவிய ராணுவத்தினரை திரும்பப் பெற முடியாது: சீனா பிடிவாதம்

லடாக் பகுதியில் உள்ள தீப்சாங் பள்ளத்தாக்கில் தெளலத் பெக் ஓல்டி பகுதியில் இந்திய எல்லைக்குள் 19 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊடுருவி 750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீன ராணுவம் ஆக்கிரமித்து முகாம்களை அமைத்திருக்கிறது. மேலும் அப்பகுதி தங்களுக்கே சொந்தமானது என்றும் உரிமை கோரி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணுவ உயர் அதிகாரிகளுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர், பிரதமர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி அருகே சீன ராணுவம் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. லடாக் பகுதியில் முகாமிட்டிருக்கும் விவகாரம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சு நடத்தி வருகின்றன. விரைவில் நிரந்தரமான தீர்வு எட்டப்படும். படை வீரர்களை திரும்பப் பெறுவது தொடர்பாக குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றார்ர்.
மேலும் எல்லைப் பிரச்னை வரலாற்று ரீதியாக பல ஆண்டுகளாக உள்ளது. இப்பிரச்னை காரணமாக உறவு பாதிக்கப்படக் கூடாது என்று இருதரப்பும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளது. எல்லைப் பகுதிகள் முறையாக வரையறுக்கப் படாததால்தான் இதுபோன்ற பிரச்னைகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. எனவே, பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே இந்திய-சீன எல்லைப் பிரச்னைக்கு அமைதியான வழியில் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. இந்திய எல்லையில் சீனா ஊடுருவி உள்ளது பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் வென்ட்ரெல் நேற்று கூறுகையில், இந்தியாவும், சீனாவும் தங்கள் எல்லைப் பிரச்னை தொடர்பாக அமைதியான முறையில் பேசி தீர்வு காண்பதை அமெரிக்கா வரவேற்கிறது. இருதரப்பினரும் இப்பிரச்னைக்கு உரிய முறையில் தீர்வு காண அமெரிக்கா ஆதரவு தரும் என்றார் .












Click it and Unblock the Notifications