ஊழல்களில் சிக்கிய அரசியல் வாரிசுகள்... ஒரு பட்டியல்!
டெல்லி: "வாரிசு அரசியல்" என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விரிந்து கிடக்கக் கூடியதுதான்... வாரிசு அரசியலை நிராகரிக்கக் கூடிய கட்சிகளும் இல்லை.. கட்சித் தலைவர்களும் இல்லை... அதே நேரத்தில் இந்த நாட்டின் பல அரசியல்வாதிகளை ஊழல்களால், சர்ச்சைகளால் சிக்கவும் வைத்திருக்கின்றனர் அரசியல் வாரிசுகள்...
நாடு விடுதலை அடைந்த பிறகு வளர்த்தெடுக்கப்பட்டதுதான் வாரிசு அரசியல்...ஒரு கவுன்சிலர் பதவி கிடைத்தால் கூட உற்றார் உறவுகளை 'வளமாக்க' வைத்துவிடக் கூட ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது தேர்தல் அரசியல்... விஸ்வரூபமெடுத்த சில வாரிசுகள்.. வில்லங்கங்களிலும் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்படி வில்லங்களில் சிக்கிக் கொண்ட சிக்க வைத்த வாரிசுகளைப் பற்றி பார்க்கலாம்...

மொரார்ஜி மகன் காந்தி தேசாய்
1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது அவரது மகன் காந்தி தேசாய் மீது முறைகேடு புகார் கிளம்பியது. குறிப்பாக பிரதமர் மகன் என்பதை பயன்படுத்தி கட்சிக்காக ரூ80 லட்சம் நிதி திரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சரண்சிங் உறவினர்கள் மீதும் ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன.

ஜெகஜீவன் ராம் மகன் சுரேஷ் ராம்
1978ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் ஜெகஜீவன் ராம். அவரது மகன் சுரேஷ் ராம், சுஷ்மா செளத்ரி என்ற டெல்லி பல்கலைக் கழக மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் 'சூர்யா' என்ற இதழில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் ஆசிரியராக இருந்தவர் மேனகா காந்தி.

இந்திரா காந்தி மகன் சஞ்சய் காந்தி
1975 ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் முதல் 1977ஆம் ஆண்டு ஜனவரி 18 வரை நாட்டில் அமலில் இருந்தது அவசரநிலை பிரகடனம்... இந்த அவசர நிலை பிரகடனத்துக்குக் காரண்மாக சொல்லப்பட்டவர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி. எந்த ஒரு அதிகாரப் பொறுப்பிலும் இல்லாதவராக இருந்தாலும் அப்படி செல்வாக்கோடு சர்ச்சைகளோடு வலம் வந்தவர் சஞ்சய் காந்தி.

நரசிம்மராவ் மகன் பிரபாகரன் ராவ்
1991-96 ஆம் ஆண்டு காலத்தில் பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். இவரது மகன் பிரபாகரர் ராவ் யூரிய ஊழலில் சிக்கினார். 1996ஆம் ஆண்டு மே மாதம் யூரியா ஊழலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் பிரபாகர் ராவ் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் அவரது குடும்பத்து உறவினர்களான சாம்பசிவ ராவ், சஞ்சீவ ராவ் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றிருந்தது. அத்துடன் நரசிம்மராவ் ஆட்சியில் உரத்துறை அமைச்சராக இருந்த ராம்லகன் சிங் யாதவின் மகன் சந்திர யாதவ் பெயரும் இடம்பெற்றது.

சுபோத்காந்த் சகாய் மகன் சுனில்
2008 ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்தவர் சுபோத்காந்த் சகாய். அவரது மகன் சுனில்காந்த் சகாயின் நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்கக் கோரி பிரதமர் அலுவலகத்துக்கு சுபோத் காந்த் சகாய் கடிதம் பரிந்துரை செய்திருந்தது சஸ்ரீச்சையை உருவாக்கியது,.

வாஜ்பாய் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா
நாட்டை உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலின் போது நீரா ராடியா என்ற அரசியல் தரகரின் பெயரும் வெளி உலகத்துக்கு அம்பலமானது. இந்த நீரா ராடியாவுக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கும் (வளர்ப்பு மகளின் கணவர்) இடையேயான தொலைபேசி உரையாடலும் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது.

கருணாநிதி மகள் கனிமொழி
ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி., சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.

முரசொலி மாறன் மகன் தயாநிதி
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனுமாகிய தயாநிதி மாறனும் ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்தார்.

மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி
மத்திய அமைச்சராக இருந்த மு.க. அழகிரியின் மகனும் திமுக தலைவரான கருணாநிதியின் பேரனுமாகிய துரை தயாநிதி ரூ16 ஆயிரம் கோடி கிரானைட் முறைகேடு வழக்கில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்தார்.

சோனியா மருமகன் ராபர்ட் வதேரா
கடந்த ஆண்டு அரசியலில் பெரும் புயல் கிளம்புவதற்கு காரணமாக இருந்தவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா..ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுகளை பயன்படுத்தி 'நிலவேட்டை'யில் ஈடுபட்டதாக வதேரா மீது குற்றம்சாட்டப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக குறைந்த விலைக்கு நிலம் வாங்கி டி.எல்.எப். நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்றார் என்பது புகாராக இருந்தது.

அசோக் சவான் குடும்பம்
மகாராஷ்டிராவை உலுக்கிய ஆதர்ஷ் வீட்டு ஒதுக்கீடு திட்டத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவானின் குடும்பத்தினர் பலரது பெயரும் சர்ச்சையில் அடிபட்டு அவர் பதவி இழக்க நேரிட்டது.

ஹெலிகாப்டர் ஊழல்
நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியாவின் சகோதரர் சதீஷ் பக்ரோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

லாலுவின் மருமகன்கள்
நிதி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் லாலு பிரசாத்தின் மருமகன்கள் நாகேந்திர யாதவ், வீரேந்திர யாதவ் ஆகியோர் சிக்கினர்.

பூட்டாசிங் மகன்
முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங்கின் மகன் சரோப்ஜித் சிங் ரூ1 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். பூட்டாசிங் தலைவராக இருந்த தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் முன்பு நிலுவையில் இருந்த ஒரு வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக நாசிக்கை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டார் என்பது புகார்.

பவன்குமார் மருமகன்
இந்த சர்ச்சைகளின் பட்டியலில் கடைசியாக சிக்கியிருக்கிறார் மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால்...இவரது மருமகனை லஞ்சப் புகாரில் சிபிஐ கைது செய்ததால் தற்போது பவன்குமாரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications