கர்நாடகத்தில் அடுத்த முதல்வர் யார்?: தலைவர்கள் இடையே கடும் போட்டி

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரையோ அல்லது முதல்வர் வேட்பாளரையோ அறிவிப்பதில்லை. அதை தேர்தலுக்குப் பின் 'ஹை-கமாண்ட்' முடிவு செய்யும் என்பதே அந்தக் கட்சியின் 'ஜனநாயகமாக' உள்ளது.
இந் நிலையில் கர்நாடகத்திலும் இவர் தான் முதல்வர் வேட்பாளர் என்ற எதையுமே சொல்லாமல் தான் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ், இப்போது வெற்றியும் பெற்றுவிட்டது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கே, வீரப்ப மொய்லி ஆகியோர் முக்கியமானவர்கள். இதில் எஸ்.எம்.கிருஷ்ணாவை ராகுல் காந்தி ஒதுக்கி வைத்துவிட்டார். மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர் கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கூட ஈடுபடவில்லை. தேர்தலிலும் போட்டியிடவில்லை. இதனால் அவர் முதல்வர் பதவிக்கான போட்டியிடும் இல்லை. இவர் ஒக்கலிகா (கெளடா) சமூகத்தைச் சேர்ந்தவர்.
அடுத்தபடியாக இருப்பவர் சித்தராமையா. இவர் மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து கடந்த தேர்தலுக்குப் பின் காங்கிரசுக்கு வந்தவர். மைசூர் பகுதியில் மிக சக்தி வாய்ந்த தலைவர். பிற்படுத்தப்பட்ட குருபா இனத்தைச் சேர்ந்த இவர். இவர் ஜனதா தளம் ஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர். தேவெ கெளடா தனது மகன் குமாரசாமியை முதல்வராக்கியதால் கட்சியை விட்டு விலகியவர். முதல்வர் பதவிக் கனவிலேயே இருப்பவர். ஆனால், பெரும்பாலான காங்கிரஸ் தலைகள் இவரை வெளி நபராகவே பார்க்கின்றன. 40 ஆண்டுகாலம் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் செய்துவிட்டு கட்சி மாறி வந்த இவரை முதல்வராக ஏற்க தலைவர்கள் தயாராக இல்லை. ஆனால், தொண்டர்களிடம் சித்தராமையாவுக்கு நல்ல செல்வாக்கு உண்டு.
வீரப்ப மொய்லி கர்நாடக முதல்வராக இருந்தவர். சோனியா காந்திக்கு மிக நெருக்கமானவர். இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார். இவருக்கு முதல்வர் பதவி மீது கண் உண்டு. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் வாய்ப்பு கிடைத்தால் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர் பதவிக்கு வரத் தயாராக இருப்பவர்.
மல்லிகார்ஜூன கார்கே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர். தொண்டர்களிடமும் செல்வாக்கு உண்டு. மத்திய அமைச்சராக இருக்கும் இவருக்கும் முதல்வர் பதவியில் அமர பெரும் ஆசை உண்டு.
இவர்களுக்கு இணையாக இன்னொரு போட்டியாளராக இருந்தவர் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வரா. இவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். முன்னாள் மாநில அமைச்சராக இருந்த இவர் 4 தேர்தல்களில் வென்றவர். ஆனால், இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டார். இதனால் முதல்வர் போட்டியில் இருந்து விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்.
அதே நேரத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கே, வீரப்ப மொய்லி போன்ற மிக மூத்த தலைவர்களை ஒதுக்கிவிட்டு இளம் ரத்தத்தை முதல்வராக்க ராகுல் காந்தி திட்டம் போட்டால், டி.கே.சிவக்குமார் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த சிவக்குமார் பெங்களூரின் கனகபுரா பகுதியைச் சேர்ந்தவர். தொண்டர்களின் ஆதரவும் உண்டு. எஸ்.எம். கிருஷ்ணாவின் சிஷ்யர். ஆனால், யாருக்கும் அடங்காதவர். சோனியாவிடமும் நல்ல அறிமுகம் உள்ள சிவக்குமாருக்கும் முதல்வர் பதவி மீது கண்டு உண்டு.
அதே போல இப்போது ராஜஸ்தான் ஆளுநராக உள்ள மார்க்ரெட் ஆல்வா, பி.கே. ஹரிப்பிரசாத் போன்ற தலைவர்களும் தங்களை முதல்வர் பதவிக்குக் கூப்பிட மாட்டார்களா என்று காத்துக் கொண்டுள்ளனர். இதில் ஹரிப்பிரசாத் இளம் தலைவர்களில் ஒருவர்.
இவர்கள் யாருமே வேண்டாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமை வந்தால் புதிய இளம் தலைவர் யாருக்காவது முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. அதே நேரத்தில் பழைய முகமாக இருக்கட்டும், எல்லோராலும் ஏற்கக் கூடியவராக இருக்கட்டும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமை வந்தால் முன்னாள் முதல்வர் தரம்சிங் மாதிரியான யாருக்காவது லாட்டரி அடிக்கலாம்.
அதே நேரத்தில் தலித் ஒருவரை முதல்வராக்கினால் தேசிய அளவில் லாபம் அடையலாம் என்ற யோசனையும் காங்கிரஸ் தலைமையிடம் இருப்பதாகத் தெரிகிறது. இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் தலித்களின் ஆதரவைப் பெறுவது எளிதாகும் என சோனியா கருதுவதாகத் தெரிகிறது.
அப்படி ஒரு முடிவை காங்கிரஸ் எடுத்தால், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம்.
தேர்தலுக்குப் பின் முதல்வர் பதவிக்குப் போட்டி வரலாம் என்பதால் எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கே, வீரப்ப மொய்லி, தரம் சிங், பரமேஸ்வரா, சிவக்குமார், ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பழம் தின்று கொட்டை போட்ட பல தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு அதிக அளவில் இடங்களை வாங்கித் தந்துவிட்டனர்.
இப்போது வெற்றி பெற்று வந்துள்ள இவர்களை எல்லாம் சமாதானப்படுத்தி யாராவது ஒரு தலைவரை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைமை தேர்வு செய்ய வேண்டும்.
அப்ப, விரைவிலேயே கூடும் காங்கிரஸ் காரியக் கமிட்டி!. கூட்டத்துக்கு மறக்காம நம்ம பிரதமரையும் கூப்பிடுங்கப்பா..!
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சிவகுமார் சிவபெருமான் ஆன கதை.. அப்ப தான் பதவியேற்றார், அதுக்குள்ள கெட்டப்பால் கொந்தளிக்குது கர்நாடகா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது











Click it and Unblock the Notifications