மே 27ம் தேதி பிளஸ்டூ மார்க் ஷீட் ....மறுகூட்டலுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பிளஸ்டூ மதிப்பெண் சான்றிதழ்கள் மே27ம் தேதி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற மே 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மார்ச் 2013-ல் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகலைப் பெறவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் மே 10 முதல் மே 13 வரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் மூலமே விடைத் தாள் நகலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு, மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம்.
இதற்கு விடைத் தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும்போது பதிவிறக்கம் செய்த ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே நகலைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 275-ம் கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மொழிப் பாடம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 205-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த சலான் மூலம் "ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' வங்கிக் கிளைகளில் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகே மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 1,010-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 505-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 27 அன்று மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பித்து தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு அஞ்சல் மூலம் அவர்களுடைய வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications