பன்சால், அஸ்வனி நீக்க முடிவை சோனியுடன் கலந்தே பிரதமர் எடுத்தார்- காங்.
டெல்லி: மத்திய அமைச்சர்கள் பவன் குமார் பன்சால், அஸ்வனி குமார் ஆகியோரது நீக்கம் தொடர்பான முடிவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இணைந்தே எடுத்தனர் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதிகூறுகையில், சோனியா காந்தியின் வலியுறுத்தலின் பேரிலேயே பிரதமர் அமைச்சர்கள் நீக்க முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியிருப்பது தவறானது. உண்மையில், பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் இணைந்தே இந்த முடிவை எடுத்தனர் என்றார் திவிவேதி.
இருப்பினும் இதுதொடர்பாக வெளியான முந்தைய செய்திகளில், இரு அமைச்சர்களையும் நீக்க பிரதமர் விரும்பவில்லை என்றும், சோனியா காந்தி வலியுறுத்தலால்தான் அவர்களை நீக்கும் முடிவுக்கு பிரதமர் உடன்பட்டார் என்றும் கூறின.
இதையடுத்து பாஜக தலைவர் அத்வானி வெளியிட்ட அறிக்கையில், தனது அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதைக் கூட தீர்மானிக்க முடியாத பிரதமராக மன்மோகன் இருக்கிறார் என்று விமர்சித்திருந்தார். இதையடுத்து திவிவேதியை விட்டு காங்கிரஸ் கட்சி தற்போது இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications