மதுரையில் வெடிகுண்டு வெடித்து மூவர் படுகாயம்... பதற்றம்

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் தனியார் மெட்ரிக் பள்ளியும், அதன் அருகில் ஹோமியோபதி கிளீனிக்கும் உள்ளது. இதன் அருகே காலி இடம் உள்ளது. அங்கு மாநகராட்சி சார்பில் இரும்பு குப்பைத் தொட்டி ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி ஊழியர்கள் தினமும் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை லாரியில் ஏற்றி கொண்டு செல்வது வழக்கம்.
இன்று காலை 9.40 மணி அளவில் அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் மர்ம ஆசாமிகள் யாரோ வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓடினர்.
இந்த குண்டு வெடித்ததில் இரும்பு தொட்டி துண்டு துண்டாக சிதறி பறந்தன. இதில் அந்த வழியாக சென்ற சேகர், மூர்த்தி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊழியர்கள் தப்பினர்
இந்த சம்பவம் நடந்து சிறிது நேரம் கழித்து அங்கு மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ள வந்தனர். வெடிகுண்டு வெடித்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் அவர்கள் கூறும்போது, அதிர்ஷ்டவசத்தால் நாங்கள் உயிர் பிழைத்தோம். இல்லை என்றால் குப்பைகளை அள்ளும்போது குண்டு வெடித்திருந்தால் எங்கள் எதி என்னாகுமோ என்று எங்களுக்கு தெரியாது என்று கூறினர்.
போலீஸ் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் கரிமேடு போலீசார், துணை கமிஷனர் திருநாவுக்கரசு, உதவி கமிஷனர் கணேசன், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இரும்பு தொட்டி அருகே ஒரு பிளாஸ்டிக் டப்பா சிதறி கிடந்தது. அருகில் செல்போன் ஒன்றும் உடைந்து கிடந்தது. எனவே மர்ம ஆசாமிகள் பிளாஸ்டிக் டப்பாவுக்குள் வெடிகுண்டை வைத்து அதனை ரிமோட் மூலம் வெடிக்க வைத்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே அதன் அருகே பெயிண்ட் மற்றும் பிளாஸ்டிக் கடை ஒன்று உள்ளது. அங்குள்ள கழிவுகளை இந்த குப்பைத் தொட்டியில் கொட்டுவதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பிளாஸ்டிக் கடை ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் குப்பைத் தொட்டியில் வெடித்த குண்டு எத்தகைய சக்தி வாய்ந்த குண்டு எனவும் அதனை குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்தது யார்? எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாகவே மதுரை நகர காவல்நிலையத்திற்கு மதுரையில் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் என்று மர்ம தொலைபேசி வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் குப்பைத் தொட்டியில் கிடந்த குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications