அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்- 'ராஜு பிள்ளை' உருக்கம்!

மதுரையில் அதிமுக அரசின் 2ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அமைச்சர் ராஜு பேசுகையில்,
தமிழகத்தில் முதல்வர் அம்மா தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. 2 ஆண்டு காலத்தில் எண்ணற்ற சலுகைகள், வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவி நிதி என எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத, செயல்படுத்த முடியாத திட்டங்களை தமிழக மக்களுக்கு முதல்வர் அம்மா அளித்து வருகிறார்.
தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தினம், தினம் சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எதிர்க்கட்சிகளே பாராட்டும் அளவிற்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த திமுக ஆட்சியில் மதுரை நகரம் ரவுடிகளின் பிடியில் இருந்தது. இன்று எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ரவுடிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். மதுரை நகரை சர்வதேச நகராக மாற்ற, முதல்வர் அம்மா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மதுரை மாநகருக்கு சிறப்பு நிதி ரூ.250 கோடி, 2 மேம்பாலங்கள் கட்ட ரூ.130 கோடி, ரூ.100 கோடி செலவில் தமிழ்த்தாய் சிலை, பூங்கா, மதுரை அருகே துணைக்கோள் நகரம் என்று மதுரைக்கு பல 100 கோடிகளை வழங்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதுமட்டுல்ல, மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் விலையில்லாமல் வழங்கி உள்ளார். வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்து எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அத்தனை திட்டங்களும் முதல்வர் அம்மாவின் தீவிர நடவடிக்கை காரணமாக செயல் படுத்தப்படுகிறது.
ஆனால் மத்திய அரசு தமிழகத்தை விரோதியாக பார்க்கிறது. மத்திய அரசு வழங்கிய 54 ஆயிரம் கிலோ லிட்டர் மண்எண்ணை, தற்போது பாதியாக குறைந்து 29 ஆயிரம் கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழக மக்களின் உரிமைகளை காப்பதில் மத்திய அரசு மவுனியாக இருக்கிறது.
ஆனால் முதல்வர் அம்மா, சட்ட ரீதியாக போராடி தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாத்து வருகிறார். முதல்வர் அம்மாவிற்கு குடும்பம் இல்லை, பிள்ளைகள் இல்லை. தமிழக மக்களாகிய நாம்தான் அவருக்கு வாரிசுகள்.
தன்னலம் கருதாத முதல்வர் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இப்போது போதிய எம்.பி.க்கள் இல்லை. இதனால் தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு உதாசீதனப் படுத்துகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதே அம்மாவின் எதிர்பார்ப்பு. அவரது எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றித்தர வேண்டும்.
இரண்டே ஆண்டில் ஈராயிரம் சாதனை படைத்த முதல்வர் அம்மாவிற்கு நாம் செலுத்தும் நன்றியெல்லாம், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த பிரதமராக முதல்வர் அம்மா அமர்ந்து, தமிழகத்தின் கோரிக்கைகளை கேட்காமலேயே நிறைவேற்றித் தருவார்.
தற்போது கேட்கிற இடத்திலே இருக்கிற அம்மா, கொடுக்கிற இடத்திற்கு வர நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்றார் ராஜு.












Click it and Unblock the Notifications