நாஞ்சில் சம்பத் இல்ல திருமண விழா: முதல்வர் ஜெயலலிதா நேரில் வாழ்த்து
சென்னை: அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அவருக்கும் அக்கட்சியின் தலைவர் வைகோவிற்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பத் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்.
அதிமுகவிற்கு வந்த நாஞ்சில் சம்பத்திற்கு அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மகள் மதிவதனிக்கும், ஆனந்த் என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமண வரவேற்பு, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு மாலை 4 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை நாஞ்சில் சம்பத் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
மேடைக்கு வந்த முதல்வர் தயாராக இருந்த மாலைகளை எடுத்து மணமக்களிடம் கொடுத்தார். அவர்கள் மாலை மாற்றிக் கொண்டு முதல்வர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அவர்களை வாழ்த்திவிட்டு ஜெயலலிதா உடனே கிளம்பிவிட்டார். மேடையில் ஜெயலலிதா பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்க அவர் பேசாமலே சென்றது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications