தயாளு அம்மாளுக்கு அல்ஜீமர் மறதி நோய்..: சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவியின் இயக்குநராக உள்ள தயாளு அம்மாளை சிபிஐ சாட்சிகள் பட்டியலில் சேர்த்திருந்தது. இதற்கான அவர் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் இந்த வழக்கில் தமது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க தமது விலக்கு அளிக்க கோரி தயாளு அம்மாள் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தயாளு அம்மாள் உடல்நிலை...
இம்மனு மீது நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது தயாளு அம்மாள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன்,
82 வயது தயாளு அம்மாளுக்கு அல்ஜீமர் என்ற மறதி நோய் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாது. அவர் சாதாரண நிலையில் இல்லை.. அவரால் சரியாக பேசவோ செயல்படவோ முடியாது.. மிக நெருங்கிய உறவினர்களைக் கூட சில சமயம் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளார். திடீரென எதிரில் இருப்பவரை தாக்கிவிடும் நிலையில் அவர் உள்ளார். அவரது அன்றாட வாழ்க்கையே பிறரது உதவியால் நடைபெற்று வருகிறது. இதனால் சாட்சிகளின் பட்டியலில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அத்துடன் தயாளு அம்மாளுவின் உடல் நிலை தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியும் சென்னை பொது மருத்துவமனையும் மே மாதம் 2ம் தேதி அளித்த சான்றிதழ்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் தேசிய மனநல நரம்பியல் நிறுவனம் மே மாதம் 4ம் தேதி அளித்துள்ள சான்றிதழும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் 80 வயதாகும் தயாளு அம்மாளுவுக்கு அல்ஜீமர் நோய்க்கான பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சான்றிதழ் அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன்பேரில் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆஜாராகித்தான் ஆகவேண்டும்:
ஆனால் தயாளு அம்மாளை சாட்சிகள் பட்டியலில் இருந்து விடுவிக்க சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பின்னர் தயாளு அம்மாளின் மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறிய நீதிபதி ஓ.பி. ஷைனி, தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களில் மன, உடல் ரீதியாக செயலற்ற நிலையில் தயாளு அம்மாள் இருப்பதாகவோ அவர் ஞாபக சக்தித் திறனை இழந்தவராகவோ, அவரிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாத நிலையில் உள்ளார் என்றோ குறிப்பிடப்படவில்லை.
அவருக்கு 60% பங்குகள் இருக்கும் நிறுவனத்துக்கு ரூ. 200 கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ள நிறுவனத்தின் மீது அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் முக்கிய சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டிய அவரை சாட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது. அதனால் வரும் ஜூலை 8ம் தேதி அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அதற்கான சம்மனை அவருக்கு ஜூன் 7ம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ வழங்க வேண்டும்.
நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவருக்கு எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படுத்தாமல் உரிய கண்ணியத்துடன் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நாளில் அதிகபட்சம் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் அவரிடம் விசாரிக்க அனுமதி அளிக்கிறேன். சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே தினமும் இயங்கக் கூடிய ஏராளமான விமானங்கள் உள்ளன. ஜூலை 8ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை அவர் நீதிமன்றத்துக்கு எந்த நேரத்திலும் சாட்சியம் அளிக்க வரலாம்.
அதற்கு வசதியாக அவர் ஆஜராகும் நாளில் குற்றம்சாட்டப்பட்டவர்களும் அரசு தரப்பு வழக்குறிஞரும் காலை 10 மணிக்கே வந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications