நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம்- கபில் சிபல்! இடஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்க கோரிக்கை!
டெல்லி: நாட்டின் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் முறையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் 4 மூத்த நீதிபதிகள் அடங்கிய தேர்வுக் குழு மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்த நடைமுறை உள்ளது. இந்த நடைமுறையை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கபில்சிபல், நீதிபதிகள் நியமனத்தில் தற்போதைய நடைமுறை லனளிக்கவில்லை. நீதிபதிகள் நியமனம் என்பது வெளிப்படையாக, பல தரப்பினரின் ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என கருதுகிறோம். அரசின் புதிய திட்டப்படி நீதிபதிகள் நியமனக் குழுவில் 6 பேர் இடம் பெறுவார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இக்குழுவில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அரசின் பிரதிநிதியாக இருப்பார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவர் இடம் பெறுவர். மேலும் குடியரசுத் தலைவர் மூலம் நீதித்துறை வல்லுநர்கள் இருவர் நியமிக்கப்படுவர் என்றார் அவர்,
கடந்த மாதம்தான் கபில் சிபல் சட்டத் துறை பொறுப்பை கூடுதலாக ஏற்றார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கும் நீதிபதிகள் நியமனக் குழுவில் வாய்ப்பு வழங்கும் திட்டமும் அரசிடம் உள்ளது. இப்புதிய நடைமுறையை அமல்படுத்த அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியதும் அவசியமாகும். அதே நேரத்தில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் அனைத்து சமூகத்தினரும் நீதிபதிகளாக வர வாய்ப்பு கிடைக்கும் என்பது அவர்களது வாதம்.












Click it and Unblock the Notifications