சந்து கேப்பில் சிந்து பாடிய பாகிஸ்தான்: ஐபிஎல்-ல் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டது அம்பலம்
டெல்லி: ஐ.பி.எல்.-ஐ பயன்படுத்தி பாகிஸ்தான் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் விட்டது தெரிய வந்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜீத் சண்டிலா உள்பட 25 பேரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில், சூதாட்டம் குறித்து தினந்தோறும் பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங்கின் பிண்ணனியில் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் உள்ளிட்ட பல நிழல் உலக தாதாக்களின் பங்களிப்பு உள்ளது என்பது தற்போது டெல்லி போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, மராட்டிய திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 23 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கைதான சூதாட்ட தரகர்கள் அனைவரும் ஐ.பி.எல். போட்டி நடை பெற்ற நாட்களில் துபாய், கராச்சி, அபுதாபி, கிபோ நகரங்களுக்கு அடிக்கடி போன் செய்தது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர்கள் சூதாட்ட பண பரிமாற்றம் பற்றி பேசியிருக்கலாம் என சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரமாக்கினர்.
போலீசாரின் யூகம் சரி என தெரிய வந்ததையடுத்து, பண பரிமாற்றம் எப்படி நடந்தது என்ற அடுத்தகட்ட முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பும் நிழல் உலக தாதாக்களும் சேர்ந்து சூதாட்ட தரகர்களுக்கு கள்ள ரூபாய் நோட்டுக்களை கொடுத்து இருப்பது தெரிய வந்தது.
பார்ப்பதற்கு உண்மையான நோட்டுகள் போல் காட்சியளிக்கும் 5ஓ ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தானில் அச்சடித்துள்ளனர். அவை, காட்மாண்டு வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு,அனித்து முக்கிய தரகர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
சூதாட்ட பந்தயத்தில் வென்றவர்களுக்கு, நல்ல நோட்டுகளுக்குப் பதில் கள்ள நோட்டுகளைத் தரகர்கள் லட்சக்கணக்கில் பரிமாற்றம் செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக ரூ100, ரூ1000 நோட்டுக்களை விட 500ரூபாய் நோட்டுக்களே அதிகமாக புழங்கியுள்ளன.
தரகர்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தில் கள்ளநோட்டு உள்ளதா என போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், இதுபோன்று பாகிஸ்தானில் கள்ளநோட்டுகள் அச்சாவதைத் தடுக்க புதிய 7 பாதுகாப்பு முறைகளை கடை பிடிக்க ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications