ஓசூரில் பி.இ. இறுதியாண்டு மாணவர் கழுத்து அறுத்து கொலை: கொலையாளிகளுக்கு வலை
ஓசூர்: ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சென்னை மாணவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ராமநாதன் மகன் ராகவ்(22). அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ. இறுதியாண்டு படித்து வந்தார். அவர் ஓசூர் காமராஜ் காலனி 3வது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டு மாடியில் உள்ள அறையை வாடகைக்கு எடுத்த தனியாக தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு ராகவ் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு பதறியடித்து தூக்கத்தில் இருந்து எழுந்த அக்கம்பக்கத்தினர் ராகவ் வீட்டுக்கு ஓடி வந்தனர். அப்போது வீட்டு வாசலில் நின்ற 2 மர்ம நபர்கள் மக்கள் வருவதைப் பார்த்ததும் தப்பியோடினர். உடனே பொதுமக்கள் அவர்களை துரத்திச் சென்றனர். ஆனால் அவர்கள் பொது மக்கள் கையில் சிக்காமல் ஓடிவிட்டனர்.
ராகவ் அறைக்கு சென்ற பொதுமக்கள் அவர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது கழுத்தில் 2 இடங்களிலும், உடலில் ஒரு இடத்திலும் ஆழமான வெட்டு காயம் இருந்தது. அறையில் அவரது ஆடைகள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ராகவின் அறையில் உள்ள பாத்ரூமில் மிளகாய்ப்பொடி சிதறிக் கிடந்தது. மேலும் அங்கிருந்த வாளியில் இருந்த தண்ணீர் ரத்த சிவப்பாக இருந்தது. கொலையாளிகள் ராகவை கொன்றுவிட்டு கையை கழுவிவிட்டுச் சென்றுள்ளனர். ராகவ் பயன்படுத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பை காணவில்லை. அதை கொலையாளிகள் எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கொலைக்கு காதல் விவகாரம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த ராகவின் பெற்றோர் ஓசூர் வந்து தங்கள் மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.












Click it and Unblock the Notifications