நாம் தமிழர் கட்சி 10 வருடத்தில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்: சீமான்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுக்க கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென கடலூர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.
உண்ணாவிரத போராட்டம் தடைப்பட்ட நிலையில் சீமான் நிருபர்களிடம் பேசும்போது, என்.எல்.சி. நிர்வாகத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை மாநில அரசும் எதிர்த்து தான் வருகிறது. இந்நிலையில் நாங்கள் ஜனநாயக முறைப்படி பட்டினி போராட்டம் நடத்த இருந்தோம். ஆனால் அதற்கு மாநில அரசு தடை விதித்து இருப்பது தேவையற்றது.
நாங்கள் ஒருபோதும் அத்துமீறி ஆர்பாட்டமோ, போராட்டமோ நடத்துபவர்கள் அல்ல. எங்களுக்கு தொடர்ந்து விதிக்கப்படும் தடை தேவையற்றது. இந்த செயல் அடக்குமுறைக்கு ஒப்பானது. நாங்கள் மத்திய அரசை எதிர்த்து தான் உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தோமே தவிர மாநில அரசை எதிர்த்து அறிவிக்கவில்லை. எல்லா பிரச்னைக்குமே நீதிமன்றத்தை அனுகினால் நாட்டில் சட்டமன்றம் எதற்கு? பாராளுமன்றம் எதற்கு? இதேபோல் எங்களுக்கு தொடர்ந்து தடை போட்டால், இன்னும் 10 வருடம் கழித்து ஆட்சியை கைப்பற்றி எங்களுக்கு தடை விதித்தவர்களுக்கு நாங்கள் தடை விதிப்போம் என்று சீமான் ஆவேசமாக கூறினார்.












Click it and Unblock the Notifications