ராஜ்யசபா தேர்தல்..சிபிஎம் ஆதரவை கோருகிறது திமுக!

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சிகளான தேமுதிக, திமுக ஆகியவை என்ன செய்யப் போகிறது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
29 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தேமுதிகவின் 6 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். மேலும் 6 எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுகவோ, தேமுதிகவின் ஆதரவை கோரியது. ஆனால் தேமுதிக தரப்பில் உறுதியான பதில் கிடைக்கவில்லை. இதனால் 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவைக் கோர திமுக முடிவு செய்திருக்கிறது. ஏற்கெனவே காங்கிரஸும் திமுகவை ஆதரிக்க முடிவு செய்திருப்பதால் சிபிஎம் ஆதரவு இருந்தால் வெற்றி நிச்சயம் என்ற கணக்குடன் களத்தில் இறங்கியுள்ளது திமுக.
இதற்காக டெல்லியில் சிபிஎம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலர் பிரகாஷ் காரத்தை திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலு நேற்று சந்தித்து பேசினார். அப்போது, "மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு பிரதிபலனாக, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராஜனின் பதவிக் காலம் முடியும்போது, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுக சார்பில் ஆலோசனை முன்வைக்கப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து, தங்கள் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவிடம் ஆலோசித்த பின்னர் முடிவைத் தெரிவிப்பதாக பிரகாஷ் காரத் கூறியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications