சென்னை விபத்தில் சிறுவனைக் கொன்ற மதுபான ஆலை அதிபர் மகன் ஷாஜி கொச்சியில் கைது
சென்னை: சென்னையில் தாறுமாறாக கார் ஓட்டியதில் சிறுவன் இறந்த வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மதுபான ஆலை அதிபர் புருஷோத்தமனின் மகன் ஷாஜி கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகே கடந்த மாதம் 23ஆம் தேதி கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த பயணிகள் நிழற்குடை மீது மோதியது. இதில், தூங்கிக் கொண்டிருந்த சுபரக்ஷிதா, முனிராஜ், அமைந்தகரையைச் சேர்ந்த ராஜாமொய்தீன், மயிலாப்பூரை சேர்ந்த மணி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில், சிறுவன் முனிராஜ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, காரில் இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களுடன் வந்த எம்.பி. டிஸ்லரீஸ் என்ற மதுபான ஆலை உரிமையாளர் புருஷோத்தமன் மகன் ஷாஜி தப்பிவிட்டார். டிரைவர் குமார் என்பவர் காரை ஓட்டியதாக அவர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றவர்களை விடுவித்தனர்.
புருஷோத்தமன் மகன் ஷாஜி என்பவர்தான் காரை ஓட்டியதாகவும், அவரை காப்பாற்ற, குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு வந்த தகவலையடுத்து,ஷாஜியை தப்பவிட்ட அண்ணாசதுக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் இதுதொடர்பான வழக்கு, அண்ணாநகர் போக்குவரத்து போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், போலீஸாரால் கைது செய்யப்பட்ட டிரைவர் குமார் உண்மையில் ஷாஜியின் டிரைவர் கிடையாது என்ற தகவல் வெளியானது. இதனிடையே விபத்து நடந்த காரில் எம்.பி டிஸ்ட்லரிஸ் ஷாஜியுடன், மத்திய அமைச்சர் வயலார் ரவியின் நெருங்கிய உறவினர் ஒருவரும் உள்ளே இருந்துள்ளார். தலைமறைவாக இருந்த உள்ள ஷாஜியை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாங்காக்கில் இருந்து கொச்சி வந்த ஷாஜியை விமான நிலையத்தில் கேரள காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, அவரை சென்னை கொண்டு வர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications