நானா வெட்டி விட்டேன்?... கருணாநிதி கேள்வி

காலையிலே திருமண விழாவிலே தலைமை தாங்கி நடத்தி வைக்க வேண்டும் என்ற அழைப்பை, ஆணையாக ஏற்று உரிய நேரத்திலே திருமணத்திலே கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக காலை உணவைக் கூடத் தியாகம் செய்து விட்டு மணவிழாவிற்கு வந்துள்ளேன்.
இந்த மணவிழாவிலே பல கருத்துகளை நம்முடைய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக திருநாவுக்கரசர், நான் அவர்களோடு ஒட்டி இருக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியும். அதனால் அதைப் பற்றி விரிவாக இங்கே பேச விரும்பவில்லை.
ஏனென்றால் காமராஜருடைய பெயரால் அமைக்கப்பட்டுள்ள இந்த மாமன்றத்தில் அரசியல் பேசுவதற்காக தனி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. இது போன்ற திருமண நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுவது பொருத்தமாக இருக்காது என்பதை அறிவேன். ஆகவே அந்தப் பிரச்சினையை இதோடு நிறுத்தி விடலாம்.
தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் ஒருவிதமான நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்த ஆண்டுகளாக ஆகிவிட்டது. இதனை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பண்பாடு என்ற ஒன்று தமிழர்களுக்கு உரிய ஒன்று. அதிலும் தமிழர் பண்பாடு, தன்னுடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு, அதே நேரத்தில் மொத்த தமிழினத்தினுடைய மரியாதையையும் காப்பாற்றுவதற்காக உள்ள பண்பாடாகும்.
அந்தப் பண்பாட்டின்படி இன்றைக்கு தமிழகத்திலே எல்லோரையும் நட்போடு பழகி நேசித்து, எல்லோரையும் விரும்பி, எல்லோரிடத்திலும் உறவு கொள்வதற்கான உரிமையோடு பழகி, இந்த மாமன்றத்திலே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து திருநாவுக்கரசரையும், அவருடைய குடும்பத்தாரையும், புதிய மணமக்களையும் வாழ்த்துகிறோம் என்றால், இந்த நிலை தான் திருநாவுக்கரசர் தமிழகத்திலே வளர்த்துள்ள பண்பாட்டின் சின்னம்.
அவர் எந்தக் கட்சியிலே இருக்கிறார் என்பதல்ல. எந்தக் கட்சிக்காக வாதாடுகிறார், போராடுகிறார் என்பதல்ல. அவருடைய உள்ளம் தமிழ் உள்ளமாக இருக்கிறதா? தமிழர்களின் நாகரிகத்தை, கலையை, கலாச்சாரத்தைப் போற்றுகின்ற பண்பாடு கொண்ட உள்ளமாக இருக்கிறதா? என்பதை எண்ணும் போது, நான் நிச்சயமாகச் சொல்வேன், அடித்துச் சொல்வேன், ஆயிரம் முறை சொல்வேன், அவருக்கு உரிய வேண்டிய நண்பர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள்.
இது அந்தக் கட்சியினரின் குறை அல்ல. திருநாவுக்கரசர் பெற்றுள்ள மனநிறை. அந்த நிறையின் காரணமாகத் தான், அவர் எங்கிருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும் நம்மவர் என்ற அந்த முறையில் அவரோடு நான் பழகுகிறேன்.
அவர் சென்ற ஆண்டு ஒரு கட்சியிலே இருக்கலாம், இந்த ஆண்டு இன்னொரு கட்சியிலே இருக்கலாம். எங்கிருந்தாலும் அவர் நம்முடையவர் தான் என்கின்ற அந்த எண்ணத்தோடு இன்றைக்கு தமிழர்கள், தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டிலே உள்ள பெரியவர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை ஏற்றிப் புகழ்கிறார்கள். இது எல்லோருக்கும் கை வந்த கலை அல்ல. தமிழகத்தில் திருநாவுக்கரசர், ஒருவருக்கு மாத்திரம் கை வந்த கலை. இந்தக் கலை என்று சொன்னால், அதை யாரும் மறுக்க இயலாது.
மண விழாவில் மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டுமென்று வாழ்த்துகின்றேன். அதே நேரத்தில் கணவனும் மனைவியும் எப்படி வாழவேண்டுமென்பதற்காக ‘‘இன்நிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்கு தன் நிழல் கொடுத்தளிக்கும் கலை'' என்ற மொழிக்கேற்ப, இனிய நிழல் இல்லாமல் வருந்துகின்ற தன்னுடைய பெண்மானுக்கு, ஆண் மான் தன்னுடைய நிழலைக் கொடுத்து, அந்தக் கோடையின் வெப்பத்தைப் போக்கும் என்று பழைய தமிழ் நூல்களில் எடுத்துச்சொல்லப்பட்டுள்ளது.
இன்நிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்கு தன் நிழல் கொடுத்தளிக்கும் கலை போல மணமகனும், அதற்கேற்ப மணமகளும் இல்லறத்தைத் து£ய்மையாக என்றென்றும் இன்பமாக நடத்த வேண்டுமென்று வாழ்த்துகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications