Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்டா விவசாயிகள் துயர் துடைக்க காவிரி மேலாண்மை வாரியம் நிறுவுங்கள்: வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko wants Cauvery management board soon
சென்னை: காவிரி நதிநீரை பங்கிடுவதில் தமிழகத்திற்கு கர்நாடகா துரோகம் இழைக்கிறது. எனவே காவிரி டெல்டா விவசாயிகளின் துயரத்தைப் போக்கி, தமிழ்நாட்டின் வேளாண்மையைப் பாதுகாத்திட, மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி கண்காணிப்புக்குழு இரண்டினையும் நிறுவ வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

"கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஜூன் 12ல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதை எண்ணி, காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். தென்மேற்குப் பருவ மழை எதிர்பார்த்த அளவுக்குக் கைகொடுக்கவில்லை. மேட்டூர் அணையில் குறைந்தபட்சம் 52 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தால்தான் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட முடியும். ஆனால், தற்போது வெறும் 3.53 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருக்கின்றது.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் ஜூன் மாதத்தில் அளிக்க வேண்டிய தண்ணீரின் அளவு திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதன்படி 10 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயத்திற்கு மிக முக்கியமான காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில், நீர்ப்பாசனத் தேவைக்காக தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் 134 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நடுவர்மன்றம் சரியான உத்தரவை பிறப்பித்து இருக்கின்றது.

ஆனால், காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் கர்நாடக மாநிலம் அடாவடித்தனமாக நடந்து கொண்டு இருக்கின்றது. டெல்லியில் ஜூன் 1 மற்றும் ஜூன் 12ல் நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டங்களில், கர்நாடக மாநில அரசின் சார்பில் வைக்கப்பட்டு உள்ள கோரிக்கைகள், அரசியல் சட்டப்படி அதிகாரம் மிக்க காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உதாசீனப்படுத்துவதாக இருக்கின்றன.

ஜூன் 12 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தில், நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பில் அளித்த உத்தரவின்படி, ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வழங்க வேண்டிய நீரின் அளவான 134 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட முடியாது என்றும், 97.82 டி.எம்.சி.தான் தரமுடியும் என்றும் கர்நாடகம் அக்கிரமமான முறையில் கூறி இருக்கின்றது. மேலும், வறட்சிக் காலத்தில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ள நடுவர் மன்றம் அளித்து உள்ள உத்தரவையும் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்து இருக்கின்றது.

1990 ஆம் ஆண்டு ஜூன் 2ல் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், 17 ஆண்டுகளாக, காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பான அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து, தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட காவிரிப் பாசன மாநிலங்களின் நீர்த் தேவைகள், பற்றாக்குறை காலங்களில் நிலவும் சூழல்கள் போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டுதான் 2007, பிப்ரவரி 5ல் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது.

காவிரி நடுவர்மன்றம் சுட்டிக்காட்டியவாறு இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு, அமைத்து இருக்க வேண்டும்.

ஆனால், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, ஆறு ஆண்டுகாலம் தாமதம் செய்து, உச் சநீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்ட பிறகுதான், இந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசு இதழில் வெளியிட்டது. அதன்பிறகும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழுவை அமைக்காமல் கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலுக்காக மத்திய காங்கிரஸ் அரசு, தமிழகத்திற்குத் துரோகம் செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

தற்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு அமைத்து உள்ள காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு எந்த விதமான சட்ட அதிகாரமும் கிடையாது. காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயற்படுத்தாமல் இருக்கவும், காவிரியில் தமிழகத்தின் பங்கு என நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரைத் திறந்துவிடாமல் கர்நாடக மாநிலம் இழுத்தடிக்கவும்தான் காவிரி மேற்பார்வைக்குழு நடத்தும் கூட்டங்களை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ளும்.

இதனால் பாதிக்கப்படுவது தமிழக விவசாயிகள்தான். ஜூன் 12 அன்று கூட்டத்தில் தமிழ்நாட்டின் கோரிக்கையான 6.6 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிட முடியாது என்று, காவிரி மேற்பார்வைக்குழு கூறிவிட்டது. இதன்மூலம் தற்போது அமைக்கப்பட்டு உள்ள காவிரி மேற்பார்வைக்குழுவின் மூலம், காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்பது தெளிவாகிவிட்டது.

கர்நாடகத்தில் காவிரி நீரைத் தேக்கி வைத்து உள்ள கபினி, ஹேமாவதி, ஹேரங்கி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளை, தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இரு மாநிலங்களின் தண்ணீர்த் தேவையைக் கண்காணித்து காவிரியில் நீரைத் திறந்துவிடும் சட்ட அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழுவுக்கு மட்டுமே உள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் வேளாண்மையைப் பாதுகாத்திட, காவிரி டெல்டா விவசாயிகளின் துயரத்தைப் போக்கிட மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி கண்காணிப்புக்குழு இரண்டு அமைப்புகளையும் நிறுவிட வேண்டும்" என்று வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+