நிதிஷ்குமாரை சந்திக்க மறுத்த பீகார் பாஜக தலைவர்கள்!
பாட்னா: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படக் கூடிய நிலையில் அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் எந்த நேரத்திலும் வெளியேறிவிடும். இது தொடர்பாக விவாதிக்க பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் விடுத்த அழைப்பை அம்மாநில பாஜக தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் வசிஸ்ட் நாராயண் சிங் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு துணை முதல்வரான பாஜகவின் சுஷில்குமார் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் நிதிஷ்குமார்.
ஆனால் இந்த அழைப்பை பீகார் பாஜக தலைவர்கள் நிராகரித்துவிட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பீகார் மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரும் மாநில அமைச்சருமான பாஜகவின் கிஷோர் யாதவ், எங்களது கட்சியின் தேசிய தலைவர்களான ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நிதின் கத்காரி ஆகியோர் நிதிஷ்குமாருடனும் சரத் யாதவுடனும் பேசி வருகின்றனர். பிரதமர் வேட்பாளர் விவகாரம் பற்றி அவர்கள்தான் பேசவும் முடியும். இது மாநில பிரச்சனை அல்ல. அதனால் நிதிஷ்குமாரை சந்திக்கவில்லை என்றார்.
இதனிடையே துணை முதல்வரான சுஷில்குமார் மோடி, தமக்கு உரிய அரசு வாகனத்தை நேற்று முதல் பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் உறவு முறிவடையும் என்பதையே இது சுட்டிக்காட்டுவதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications