தெலுங்கானா தனி மாநிலம் கோரி உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர் தற்கொலை!
ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் கோரி ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் தெலுங்கானா பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்கக் கோரும் போராட்டம் மீண்டும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு நேற்று சட்டசபை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது. ஆனால் போராட்டத்தை ஆந்திர அரசு ஒடுக்கியது. இதற்கு எதிராக இன்று தெலுங்கானாவின் 10 மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தெலுங்கானாவின் மகப்பூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்டாரு சீனிவாசன் என்ற பொறியியல் மாணவர் உஸ்மானியா பல்கலைக் கழக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனி தெலுங்கானா மாநிலம் அமைக்காமல் மத்திய அரசு தாமதமாக்கி வருவதால் அவர் விரக்தி அடைந்திருந்ததாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே தெலுங்கானா கோரிக்கைக்காக மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் தெலுங்கானா ஆதரவாளர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். அந்த மாணவர் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெலுங்கானா போராட்டக் குழு கோரிக்கை விடுத்திருக்கிறது. உஸ்மானியா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர் உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications