பதவிக்கு தகுந்த பண்பாடு வேண்டாமா?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடுவதை எடுத்துக்காட்டி மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவதைப் போல இந்த ஆண்டும் திறந்து விடப்படுமா என்று கேட்டதற்கு, ஜெயலலிதா தனது பதிலில், 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 6ம் தேதியே குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
2011ம் ஆண்டு மே 13ம் தேதி வரை தமிழகத்தில் ஆட்சி செய்தது திமுக. அந்த ஆண்டு கர்நாடகத்தோடு, திமுக அரசு சுமூகமாகப் பேசி நல்லுறவுடன் இருந்ததாலும், மேட்டூர் அணையும் நிரம்பியிருந்ததாலும், பதவிக்கு வந்த இருபதே நாட்களில் மேட்டூர் அணையைத் திறந்ததைப் பற்றி, ஏதோ அவருடைய ஆட்சியின் முயற்சியால் தான் அதைச் செய்ததைப் போல ஜெயலலிதா தற்போது தற்பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.
2012 மற்றும் 2013ம் ஆண்டுகள் தான் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் ஆண்டுகள். அந்த இரண்டு ஆண்டுகளில் மேட்டூர் அணை எப்போது திறக்கப்பட்டது என்பதை ஜெயலலிதா சொல்லியிருக்க வேண்டியதுதானே? அதிமுக அரசு இனியாவது விழித்துக் கொண்டு இந்த ஆண்டு குறுவைச் சாகுபடி உண்டா? இல்லையா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் விடுத்த அறிக்கை கேலிக் கூத்தான, நகைப்புக்குரிய, தெளிவற்ற அறிக்கையாம். முதல்வர் சொல்கிறார். ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாள் வரை குறுவைச் சாகுபடி பற்றி தமிழக அரசு அறிவிப்பு எதையாவது வெளியிட்டதா. நான் அறிக்கை விடுத்த பிறகு தானே, அவசர அவசரமாக ஆலோசனைக் கூட்டம். அதற்குப் பிறகு சலுகைகள் அறிவிப்பு எல்லாம் நடைபெறுகிறது.
முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய அமைச்சர்கள் சொல்வதையே கேட்டுக் கொண்டிராமல், சற்று இறங்கி வந்து விவசாயிகளின் குமுறலையும், குரலையும் கொஞ்சம் காது கொடுத்து நிதானமாகக் கேட்டால் உண்மை நிலவரங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அல்லது வறட்சி நிவாரணப் பங்கீடு எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளையாவது படிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் சாகுபடி பொய்த்ததால் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை பெயர்களோடு ஏடுகள் வெளியிடவில்லையா. 17 விவசாயிகளில் அரசின் சார்பில் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணத் தொகையை அரசு அறிவித்துவிட்டு மற்றவர்கள் எல்லாம் விவசாயிகளே இல்லை என்று கூறவில்லையா? அரசியல் லாபத்துக்காக, சுயநலனுக்காக, குடும்ப நலனுக்காக தமிழக மக்கள் நலனை அடகு வைக்கக் கூடியவர், இரட்டை வேடம் போடக் கூடியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் அர்ச்சனை செய்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், கச்சத் தீவு பிரச்னையிலும், சேது சமுத்திரத் திட்டப் பிரச்சனையிலும், ஏன் காவிரிப் பிரச்சனையிலும் கூட ஜெயலலிதா போட்ட இரட்டை வேடம் பற்றி மக்கள் அறியமாட்டார்களா என்ன? வெலிங்டனில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு பயிற்சி அளிப்பது பற்றி மத்திய அரசை நான் எதிர்க்காததற்குக் காரணம், என் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுக்காகத் தான் என்ற ஒரு அபூர்வக் கண்டுபிடிப்பையும் ஜெயலலிதா தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
இப்படிப் பட்ட விநோத எண்ணங்கள் ஜெயலலிதாவுக்குத் தான் வரும். வெலிங்டனில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது பற்றி நான் அறிக்கை எழுதியது 10ம் தேதி. அப்போது கனிமொழி மாநிலங்கள் அவை தேர்தலில் போட்டியிடுவது பற்றிய முடிவே எடுக்கப்படவில்லை. முடிவெடுத்து வேட்பு மனு தாக்கல் செய்தது 15ம் தேதியாகும். ஆனால், 10ம் தேதியன்றே காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவுக்காகத் தான் அப்படியொரு அறிக்கை விடுத்தேன் என்று திசை திருப்பக் கூடிய வகையில் சிந்திக்கக் கூடியவர் ஜெயலலிதாவைத் தவிர வேறு யார் இருக்க முடியும். அந்த அறிக்கையில் நான் மத்திய அரசை ஆதரித்து எதுவும் எழுதவில்லை.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை இவரது தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்திலே வற்புறுத்தியதன் காரணமாகத்தான் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது என்று ஜெயலலிதா திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக மத்திய அரசை வலியுறுத்தியதால் தான் நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழிலே வெளியிடப்பட்டதே தவிர, அதற்கு தான்தான் காரணம் என்று ஜெயலலிதா பெருமை சேர்த்துக் கொள்ள முயற்சிப்பது தான் உண்மைக்குப் புறம்பானது.
காவிரி மேற்பார்வைக் குழுவின் கூட்டம் 12ம் தேதியன்று முடிந்தவுடன் குறுவைச் சாகுபடி குறித்த அறிவிப்பை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசால் வெளியிடப்படும் என்பதை யூகித்துக் கொண்டு, இந்த ஆண்டு குறுவைச் சாகுபடி உண்டா என்று நான் குதர்க்கமான, குரோதமான, முரண்பாடான அறிக்கை விட்டேனாம். அரசு இவ்வாறு அறிக்கை வெளியிடக் கூடும் என்பதை யூகித்து, நான் முன்பே அதுபற்றி அறிக்கை வெளியிட்டிருந்தால் அது எதிர்க்கட்சியின் கடமை தானே?
காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் மழை பெறப்பட்டவுடன் நமக்கு உரிய தண்ணீர் பெறப்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் என்று சொல்லியிருக்கிறார். மழை பெறப்பட்டவுடன் நமக்கு உரிய நீர் பெறப்படுமாம். விவசாயிகளுக்கு எத்தகைய உறுதியை முதல்வர் அளித்திருக்கிறார், பார்த்தீர்களா? ஒட்டுமொத்தமாக முதல்வரின் அறிக்கையைப் படித்தால் நமக்கு வருத்தம் தான் ஏற்படுகிறது. முதல்வர் மீண்டும் ஒருமுறை அவருடைய அறிக்கையைப் படித்துப் பார்க்கட்டும். அப்போது தெரியும், நான் சொல்வது உண்மையா அல்லது அவரது அறிக்கை உண்மையா. இனியாவது காழ்ப்புணர்வைக் கைவிட்டு, குரோதத்தை ஒதுக்கி விட்டு ஆட்சியை நடத்த முயற்சி செய்யுங்கள். பதவிக்குத் தக்க பண்பாடு வேண்டாமா? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications