ராஜ்யசபா தேர்தல்- நேருக்கு நேர் மல்லுக்கட்டும் திமுக- தேமுதிக!

ராஜ்யசபா தேர்தலில் நிமிடத்துக்கு நிமிடம் காட்சி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை திமுக வேட்பாளரை காங்கிரஸ் ஆதரிக்கும் என்ற நிலை மாறிப் போய் உள்ளது. காங்கிரஸ் கட்சி, தேமுதிக வேட்பாளரை ஆதரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் பரப்பப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 6 எம்.பிக்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. ஒரு எம்.பியை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது சட்டசபையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால், அ.தி.மு.க சார்பில் 4 எம்.பி.க்களும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் மேலும் ஒரு எம்.பியும் வெற்றி பெறுவது உறுதி.
அ.தி.மு.க.வுக்கு 151 எம்.எல்.ஏக்களும் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட கட்சிகளுக்கு 18 எம்.எல்.ஏக்களும், பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ உள்பட இந்த அணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே அதிமுக கூட்டணியின் 5 பேர் வெற்றி பெறுவது உறுதி.
6-வது எம்.பி இடத்துக்கு இப்போது கடும் போட்டி உருவாகியுள்ளது. 6-வது எம்.பி. இடத்துக்கு தி.மு.க. சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும் போட்டியிடுகின்றனர். தேமுதிகவுடன் பல மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இரு கட்சிகளுமே மல்லுக் கட்ட வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்.
திமுகவுக்கு 23 எம்.எல்.ஏக்களும், தே.மு.தி.க.வுக்கு 22 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். தி.மு.க. வெற்றிபெற மேலும் 11 எம்.எல்.ஏக்களும் தே.மு.தி.க. வெற்றி பெற 12 எம்.எல்.ஏக்களும் தேவைப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள், பாமகவின் 3 எம்.எல்.ஏக்கள், மனித நேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு யாருக்கு என்பது தெரிவிக்கவில்லை.
காங்கிரஸ் தி.மு.க.வை ஆதரிப்பது பற்றி இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மனிதநேய மக்கள் கட்சி இன்று முடிவு அறிவிக்கிறது. பா.ம.கவின் முடிவு 21-ந் அறிவிக்கப்பட உள்ளது. வெற்றிக்கான 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறுவதில் தி.மு.க. முனைப்பு காட்டி வருகிறது.
இப்படி ஒரு நிலைமை வராமல் இருக்க ஞாயிற்றுக்கிழமை இரவு திமுக சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொன்முடியும் தேமுதிக சார்பில் எல்.சுதீஷும் சென்னையில் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் இந்த முறை திமுகவை தேமுதிக ஆதரிக்க வேண்டும் என்றும், அடுத்த முறை தேமுதிகவை திமுக ஆதரிக்கும் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் சுதீஷ் இதை நிராகரித்துவிட்டார். ஆனாலும் தேமுதிக பிடிகொடுக்காமல் நேற்று திடீரென வேட்புமனுத் தாக்கல் செய்தது. இதனால் திமுக அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
இதனால் தேமுதிகவில் சில எம்.எல்.ஏக்களை வளைக்கும் வேலைகளையும் திமுக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தேமுதிக எம்.எல்.ஏக்களும் சிறிய கட்சிகளுக்கும் ‘நல்ல ரேட்' அமைந்திருக்கிறது.
தேமுதிக- திமுக நேரடியாக மல்லுக்கட்டுவதால் தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications