நீ பெங்களூர் வராட்டி செத்துடுவேன்.. மிரட்டி தீக்குளித்த மனைவி பலி-கணவன் தற்கொலை
சேலம்: பெங்களூரில் உள்ள சித்தி வீட்டுக்குப் போக வேண்டும் என்று மனைவி கேட்டார். அதற்கு கணவன் மறுத்தார். இதனால் கோபமடைந்த மனைவி நீ வராவிட்டால் நான் செத்து விடுவேன் என்று கூறி தீக்குளித்தார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதைப் பார்த்து வேதனையுற்ற கணவன் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான கணபதி. இவரது மனைவி லதா. இவருக்கு 31 வயதாகிறது. கணபதி ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
வழக்கம் போல ஆட்டோடிரைவரான கணபதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் வீட்டில் தினசரி சண்டைதான். சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனது சித்தி வீட்டுக்குப் போய் விட்டு வரலாம் என்று கணவரிடம் கூறியுள்ளார் லதா. ஆனால் அதை ஏற்கவில்லை கணபதி. இதனால் சண்டை மூண்டது.
அப்போது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை கையில் எடுத்துக் கொண்ட லதா, நீ மட்டும் பெங்களூர் வராவிட்டால் இப்படியே ஊற்றிக் கொண்டு செத்துப் போவேன் என்று மிரட்டினார். இதனால் வாக்குவாதம் அதிகரித்தது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக லதா தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார்.
இதையடுத்து மனைவியைக் காப்பாற்ற முயன்றார் கணபதி. அதில் அவரும் காயமடைந்தார். உடனடியாக லதாவையும், கணபதியையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் சோகமடைந்த லதாவின் குடும்பத்தினர் கணபதியை சரமாரியாக திட்டியுள்ளனர். இதனால் விரக்தியுற்ற கணபதி தனது வார்டிலிருந்து வெளியேறினார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு அறைக்குப் போன அவர் அங்கு கேபிள் டிவி வயரால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications