மீண்டும் நெருக்கத்தை ஆரம்பித்துவிட்ட திமுக- காங்கிரஸ்!
டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைத்த காங்கிரசுடன் நெருங்க ஆரம்பித்துள்ளது திமுக.
கடந்த 27-ந் தேதி நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். கனிமொழியும் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற கனிமொழி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கனிமொழிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் தொடக்கத்தில் தயக்கம் காட்டியது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாக புகார் கூறி திமுக மத்திய அரசில் வெளியேறிய கையோடு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைவிட்டே வெளியேறியது.
இப்படி உறவை முறித்துக் கொண்டு முறைத்துக் கொண்டு போன திமுக வேற வழியில்லாமல் ராஜ்யசபா தேர்தலில் கனிமொழிக்காக காங்கிரஸிடம் கையேந்த வேண்டிய நிலை வந்தது. ஆனால் தூக்கி எறிந்துவிட்டுப் போன திமுகவை மீண்டும் தாங்க வேண்டுமா என்பதுதான் காங்கிரஸ் தலைவர்களின் தொடக்க கருத்தாக இருந்தது.
இருப்பினும் உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை பார்லிமென்ட்டில் நிறைவேற்றுவது மற்றும் லோக்சபா தேர்தல் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டுதான் கனிமொழிக்கு ஆதரவு தர காங்கிரஸ் முன்வந்தது.
இந் நிலையில் இந்த நெருக்கம் விரைவிலேயே மீண்டும் 'வெளிப்படையான' கூட்டணியாக உருவெடுக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications