ஸ்பெக்ட்ரம் வழக்கு.... எஸ்ஸார், லூப் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
டெல்லி; ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தங்கள் நிறுவன அதிகாரிகள் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்ஸார் டெலிஹோல்டிங்ஸ் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு நீதிமன்றமே எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரித்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் எஸ்ஸார் குழும நிறுவனர்கள் அன்ஷுமன் மற்றும் ரவி ரூயா, இக்குழுமத்தின் இயக்குநர் விகாஷ் சரப், லூப் டெலிகாம் நிறுவனர்கள் கிரண் கெய்தான் அவரது கணவர் ஐ.பி. கெய்தான் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த 2 நிறுவனங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில், தங்கள் நிறுவனங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி) மற்றும் 120பி (குற்ற சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணைக்கு உள்பட்டவை.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தங்கள் மீது ஊழல் குற்றம் சுமத்தப்படாத நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விசாரணை மேற்கொள்ளக் கூடாது எனக் கோரியிருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை முடிந்து 2012ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இம் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications