வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... திருச்சியில் சோதனைக்குப் பின் தாமதமாக புறப்பட்டது

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை வழக்கம்போல் 6 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு கிளம்பியது. இந் நிலையில் காலை 8.30 மணியளவில் சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு மர்ம தொலைபேசி ஒன்று வந்துள்ளது. பேசிய நபர் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறினார்.
இதனையடுத்து திருச்சி ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் அவரசம் அவசரமாக நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். காலை 9 மணியளவில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரயிலில் இருந்த அனைத்துப் பெட்டிகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
ஒருமணி நேர சோதனைக்குப் பின்னர், வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொலைபேசி மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. இதனிடையே மிரட்டல் விடுத்த மர்மநபரின் செல்போன் திருச்சியில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த முகவரியில் சென்று விசாரணை செய்த போலீசார், அது பொய்யான முகவரி என்பதை உறுதி செய்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பதை உறுதி செய்த பின்னர் பயணிகள் ஏறி அமரவைக்கப்பட்டனர். பின்னர் 11 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது.
காலை நேரத்தில் வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications