தர்மபுரியில் தொடரும் பதட்டம்.. பஸ்கள் ஓடவில்லை, போலீஸ் குவிப்பு

காதல் மணம் புரிந்து தன்னோ வாழ வந்த திவ்யா, தன்னை உதறி விட்டு தாயுடன் போனதால் விரக்தியடைந்த இளவரசன் நேற்று காலை பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் கூறுகிறது. ஆனால் உறவினர்களும், தலித் சமுதாயத்தினரும் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர்.
இளவரசன் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், தலித் சமுதாயத்தினர், குடும்பத்தினர், உறவினர்கள் என பலரும் அங்கு திரண்டு வந்தனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். சேலம் சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.
மேலும், திருப்பத்தூர், அரூர், ஊத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் செல்லும பேருந்துள் நிறுத்தப்பட்டன.
இளவரசனின் உடலைப் பார்த்து அவரது தந்தை இளங்கோவன் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். மகனின் உடலை பார்த்த கதறி அழுதார் இளங்கோவன்.
அங்கு கூடிய நத்தம் காலனி பகுதி மக்கள் கூறுகையில், தலையில் அடிபட்ட நிலையில் இளவரசன் இறந்துள்ளார். அவரது சாவில் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. எனவே, உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் தர்மபுரி டிஎஸ்பி அரசு, மது விலக்கு டிஎஸ்பி பரமேஸ்வரன், டவுன் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் ஆகியோர் அங்கு சென்றனர். அவர்கள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும், அவர்கள் உடலை எடுக்க அனுமதிக்கவில்லை.
இதையடுத்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சஞ்சய்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார், தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ராமர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது போலீசாரிடம் பேசிய உறவினர்கள், இளவரசன் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே, டாக்டர்கள் குழுவை வைத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். இதனால் நேற்று மாலை 3 மணி முதல் 5.30 மணி வரை அங்கேயே கிடந்த இளவரசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இளவரசன் மரணத்தைத் தொடர்ந்து மாவட்ட எஸ்,பி. அஸ்ரா கார்க் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த இளவரசன் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் இன்று தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து உள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தர்மபுரி ரயில்வே போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரியவருவதால் தர்மபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து உள்ளார். இதனால் பொதுஇடங்களில் யாரேனும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டாலோ, கும்பலாக கூடினாலோ கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே பதட்டமான பகுதிகளுக்கு இரவு நேர பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications