என்.எல்.சி பங்கு விற்பனை: கருணாநிதி விமர்சனத்துக்கு ஜெயலலிதா கண்டனம்

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என்றும், தமிழக மக்களின் உயிரோடும், உணர்வோடும் இரண்டர கலந்துள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தமிழக அரசின் நிதிச்சுமையைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்து, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கே இதனை விற்பனை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையை மத்திய அரசும், செபி அமைப்பும் ஏற்றுக் கொண்டதையடுத்து, இந்தப் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு ஏற்பட்டு, அதன் மூலம் எனது தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல், இந்தப் பிரச்சனையில் எனக்கு நல்ல பெயர் கிடைத்துவிட்டதே என்ற பொறாமையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, 'ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்' என்ற தலைப்பில் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது ஆதங்கத்தின் உச்ச கட்டம்.
முன்னாள் முதல்வர், கருணாநிதி தனது அறிக்கையில், 2006-ம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு எடுத்தபோது, அதைத் தடுத்து நிறுத்தியது தான்தான் என்று தம்பட்டம் அடித்து இருக்கிறார். இந்த முடிவை மத்திய அரசு எடுத்தபோது, முதலில் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதி, பின்னர் இந்த 10 விழுக்காடு பங்குகளை என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கே விற்பனை செய்யலாம் என்று பிரதமருக்கு ஆலோசனை தெரிவித்தார்.
கருணாநிதியின் இந்தக் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த நான், 1,100 கோடி ரூபாய் மதிப்புள்ள என்.எல்.சி. பங்குகளை தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதாக இருந்தால், என்.எல்.சி.யில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தலா 8 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும், இது முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தேன்.
தொழிலாளர்களும் கருணாநிதியின் யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடுமையான எதிர்ப்பையும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் கருத்தில் கொண்டுதான், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, தன்னால் தான் 2006-ம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை தாரைவார்ப்பதை மத்திய அரசு கைவிட்டது என்னும் கருணாநிதியின் கூற்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.
2013-ம் ஆண்டு மத்திய அரசு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த போது, பொதுப் பங்காக உள்ள 6.44 விழுக்காடு பங்குகளை, திரும்பப் பெறும் முறைப்படி, பொதுப் பங்கிலிருந்து திரும்பப் பெற்று பங்குகள் விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலிலிருந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை எடுத்து விடலாம், அல்லது பங்குகளை விற்பதிலிருந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் பங்குகள் ஒப்பந்த முறை விதியில் திருத்தம் கொண்டு வரலாம் என்று கோரியிருந்தேன்.
என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூறியிருந்தேன். அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு, புது டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகளுடனும், மும்பையில் செபி அமைப்பின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து, என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய அரசும், ‘செபி' அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளன.
என்.எல்.சி. பங்குகள் விற்பனைப் பிரச்சனைக்கு தீர்வு காண நான் எடுத்த முயற்சியை, நான் தெரிவித்த யோசனையை தமிழக மக்களும், பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் பாராட்டி வருவதைக் கண்டு பொறுக்க முடியாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் விதமாக, இதற்கிடையே அம்மையாரின் முடிவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டாம். எந்தெந்த அரசியல் கட்சிகள் என்று பார்த்தால்; அ.தி.மு.க.விடம் தோழமைக் கட்சிகளாக இருக்கின்ற எல்லாக் கட்சிகளும் இதற்குப் பாராட்டுத் தெரிவிக்கவில்லை. ஓரிரு கட்சிகள்தான் பாராட்டுத் தெரிவித்திருக்கின்றன. அதற்குத்தான் இவ்வளவு கூப்பாடுகள்! என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டுள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்கச் செய்தது மிகப்பெரும் சாதனை என்றே அனைத்து நடுநிலை பத்திரிகைகளும் பாராட்டு தெரிவித்துள்ளன. எனவேதான் ஒரு நாளிதழ் தனது தலையங்கத்தில் இந்த முடிவில் தமிழக அரசு தீவிரம் காட்டாமல், ஆர்வம் கொள்ளாமல் இருந்திருந்தால், தனியாருக்கு கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை.
இத்தகைய பங்குகளில் முதலீடு செய்ய தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வமுடன் காத்து நிற்கின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடுத்த அரசியல் நெருக்கடி, மறு பேச்சில்லாமல் இதற்கு இணங்கச் செய்துவிட்டது. இன்று தமிழக அரசுக்கு இந்தப் பங்குகள் விற்கப்படுவதென எடுக்கப்பட்ட முடிவு அரசியல் நெருக்கடியின் விளைவே என்று கூறியுள்ளது. மற்றொரு நாளிதழின் தலையங்கத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசாங்கத்துக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.
இதில், 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசாங்கம் முடிவு செய்தது. மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும் இப்படி 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுத்து, காலவரையின்றி போராட்டத்தைத் தொடங்கினர்.
எனவே ஒரு பக்கம் நிலக்கரி எடுப்பது பாதிக்கப்பட்டு, அதனால் பல தொடர் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும். அதே நேரத்தில் மின்சார உற்பத்தியும் பாதிக்கும் என்ற நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு அற்புதமான யோசனையை தெரிவித்தார். நீங்கள் 5 சதவீத பங்குகளை வெளியே தனியாருக்கு விற்க வேண்டாம். தமிழக அரசுக்கு சொந்தமான 5 பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் ரூ.500 கோடி கொடுத்து வாங்கிக்கொள்ளும் என பட்டவர்த்தனமாகக் கோரிக்கை விடுத்தார். அதையும் மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளது.
இன்னுமொரு நாளிதழ், தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்பிரச்சனையின் தொடக்கம் முதலே அவர் மேற்கொண்ட உறுதியான நிலையும், தனியாருக்கு பங்குகளை விற்கக் கூடாது என்று சொன்னதோடு நில்லாமல், அப்படி பங்குகள் விற்பனை செய்யப்பட்டால், அவற்றை தமிழக பொதுத்துறை அமைப்புகள் வாங்கிக் கொள்ளும் என்று கூறி, தனது கோரிக்கையில் தமிழக முதல்வர் வென்றுள்ளார். இதன் மூலம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக நிலைத்திட வழிவகுத்துள்ள தமிழக முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். என தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.
ஒரு வாரப் பத்திரிகை, தமிழகத்தை கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து மீட்ட முதல்வர், மத்திய அரசு நிறுவனத்தையும் காப்பாற்ற முன் வந்திருக்கிறார். இதைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று தலையங்கம் தீட்டியுள்ளது. ஒரு ஆங்கில நாளேடு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா துரிதமாகவும், துணிச்சலுடனும் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஏற்பட்ட நிலைமை கை மீறிப்போவது தடுத்து நிறுத்தப்பட்டது.
பொதுமக்களின் நாடித் துடிப்பை அறிந்தே, 500 கோடி ரூபாய் முதலீடு செய்து பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக இந்தப் பங்குகளை வாங்குவதற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி போன்ற அவரது எதிர்ப்பாளர்களும் கூட இந்த வழிமுறையைப் பின்பற்றி தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குகள் விற்பனை செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியது முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த நடவடிக்கையில் மத்திய அரசுடன் உறுதியாக பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய தலைவர் என்ற புகழை நிலைநிறுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
கருணாநிதி தனது அறிக்கையின் இறுதியில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை யாருக்கும் விற்கக் கூடாது என்று முதலில் வைத்த கோரிக்கையில் தமிழக அரசு உறுதியாக இருந்திருக்குமானால், தொழிலாளர்களின் காலவரையரையற்ற உண்ணா நிலைப் போராட்டம் தரும் அழுத்தத்தின் காரணமாக மத்திய அரசு விதி விலக்குக் கொடுத்து, 2006-ம் ஆண்டில் நடந்ததைப் போலவே தங்கள் முடிவினை திருப்பப் பெற்றிருக்கக் கூடும் என்றும், இது உண்மையிலேயே இமாலய வெற்றியா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்த அளவுக்கு ஆதங்கப்பட்டு, பொறாமையில், விரக்தியில் கருணாநிதி அறிக்கை விட்டிருப்பதை வைத்தே, இந்த வெற்றி எப்படிப்பட்ட வெற்றி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களே இந்த பங்குகளை வாங்கும் என்ற எனது அரசின் யோசனை காலத்தே எடுத்த சிறந்த முடிவு. செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். அதாவது செய்யக் கூடாததைச் செய்தால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை கருணாநிதிக்கு இந்த தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மொத்தத்தில், ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் என்ற தலைப்பில் கருணாநிதியால் வெளியிடப்பட்ட அறிக்கை அந்தப் பழமொழிக்கேற்ப ஈரும் பேனுமாகத்தான் உள்ளது என்பதையும், கருணாநிதியின் ஆற்றாமையின் வடிகாலாகவே அந்த அறிக்கை அமைந்துள்ளது என்பதையும் அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
பொதுத்துறை நிறுவனங்களின் 10 சதவீத பங்குகள் பொதுப்பங்காக இருக்க வேண்டும் என்ற விதியை 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தபோது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த கருணாநிதி அமைதியாக இருந்தது ஏன் என்றும் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியைப் பொறுக்க முடியாமல் கருணாநிதி பேசிவருவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications