கோவையில் இரண்டு மாணவர்களுக்காக அரசுப் பள்ளி
கோவை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் வெகுவாகக் குறைந்து வருவதற்கு உதாரணமாக, கோவை மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு அரசு துவக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம், பொகலூர் ஊராட்சிக்கு உள்பட்ட தாலத்துறை கிராமத்தில் 70 குடும்பங்கள் வரை உள்ளன; 200-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இக்கிராமம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளுக்குப் பொதுவான பள்ளியாக கடந்த 1967-ஆம் ஆண்டு துவக்கப் பள்ளி இங்கு தொடங்கப்பட்டது.
பள்ளி தொடங்கப்பட்ட நாட்களில் சுமார் 40 முதல் 50 குழந்தைகள் வரை இங்கு படித்து வந்தனர். ஆனால் இந்நிலை முற்றிலும் மாறி, இப்போது இந்தப் பள்ளியில் 2 குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 9 ஆக இருந்தது. அப்போது படித்தவர்களில் 7 பேர் 5-ஆம் வகுப்பு முடித்துச் சென்றுவிட்டனர். தற்போது முதல் வகுப்பில் காவியா என்ற மாணவியும், 3-ஆம் வகுப்பில் அகிலேஷ் என்ற மாணவரும் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தலைமையாசிரியர் மட்டுமே பாடம் நடத்தி வருகிறார்.
மொத்தமாக ஒரு ஹாலில் மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வரும் இப்பள்ளியில், தற்போது ஒரே வகுப்பில் வைத்து தலைமையாசிரியர் பாடம் நடத்தி வருகிறார். அருகிலுள்ள முடுக்கன்துறை அரசு துவக்கப் பள்ளியில் இருந்து நாள்தோறும் எடுத்து வந்து இவ்விரு மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கப்படுகிறது.
இந்தக் கிராமத்தில், பள்ளியில் படிக்கும் தகுதியுடைய குழந்தைகள் பலர் இருந்தும், அவர்கள் பல கி.மீ. தொலைவிலுள்ள மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
இந்நிலை இங்கு மட்டுமல்ல; தமிழகத்தில் இதுவரை நகர வாசம் வீசாத கிராமங்களில் தொடங்கப்பட்ட துவக்கப் பள்ளிகள் பலவும் இந்நிலையில் தான் உள்ளன. இதற்கு தனியார் பள்ளிகள் பெருக்கம், வேலைவாய்ப்புத் தேடி கிராமத்தை விட்டு வெளியேறும் குடும்பங்கள் என பல காரணங்கள் கூறப்பட்டாலும், தனியார் பள்ளிக்கு நிகரான தரமான கல்வி அரசு பள்ளிகளில் கிடைப்பதில்லை என்பதே பெற்றோரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications
