ஸ்பெயின் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு!
ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சான்டியாகோ நகரில் நேற்று நடைபெற இருந்த கிறிஸ்தவ ஆலய விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்களில் ஏராளமானோர் வந்துள்ளனர். அதுபோன்று யாத்ரீகர்கள் வந்த ஒரு ரயில்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது. 8 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 5 ரயில்வே பணியாளர்களும், 218 பயணிகளும் இருந்துள்ளனர்.

அதிவேகம்
அந்த ரயில் வளைவு ஒன்றில் அதிவேகத்தில் திரும்பும்போதுதான் தடம்புரண்டு பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அந்த வளைவில் அதிகபட்சமாக 80கிமீ வேகத்தில்தான் திரும்ப வேண்டும் என எஞ்சின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இரட்டிப்பு வேகத்தில், அதாவது மணிக்கு 200 கிமீ வேகத்தில் அந்த ரயில் வந்ததால்தான் ரயில் விபத்தில் சிக்கியிருக்கிறது.

உயிரிழப்பு
ரயில் தடம்புரண்டு மோதிய வேகத்தில் பெட்டிகளில் தீப்பற்றியுள்ளது. அப்போது, இடிபாடுகளில் சிக்கியோர் வெளியே வர முடியாமல் தீயில் கருகியுள்ளனர்.

மீட்புப் பணி
விபத்து குறித்து தகவலறிந்ததும் உடனடியாக பெட்டிகளில் சிக்கியிருந்தோரையும், காயமடைந்தவர்களையும் மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மொத்தம் 130 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 30க்கும் அதிகமானோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் வேதனை
ஸ்பெயின் நாட்டு பிரதமர் மரியானோ ரஜாய்க்கு விபத்து நடந்த சான்டியாகோதான் சொந்த ஊர். இந்த கோர விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்ட அவர் தமது வாழ்நாளில் மிகவும் துயரமான நாள் இது என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை தீவிரப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

டிரைவர்கள் தப்பினர்
அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த கோர விபத்தில் சிக்கிய ரயிலை ஓட்டி வந்த 2 எஞ்சின் டிரைவர்களும் உயிர் பிழைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குண்டு வெடிப்பா?
2004ம் ஆண்டு அங்கு நடந்த கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதில், 190 பேர் பலியானார்கள். இந்த நிலையில், ரயில் விபத்து நடந்தபோது படு பயங்கர சப்தம் கேட்டதாக கூறப்படுகிறது. எனவே, முதலில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், ரயில் அதிவேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணமாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாத கைவரிசை எதுவும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொண்டாட்டங்கள் ரத்து
சான்டியாகோ நகரில் நடைபெற இருந்த கிறிஸ்தவ ஆலய திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications