காவிரி நடுவர்மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளிவர ஜெயலலிதாவா காரணம்?: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த ஆண்டு 2012-ல் தான் ஜூன் 12-ந் தேதியன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் மேட்டூர் அணை திறக்கவில்லை என்றால், இந்த 2013-ம் ஆண்டிலாவது ஜூன் 12-ந் தேதியன்று வழக்கம் போல தண்ணீர் திறக்கப்பட்டதா என்றால், ஆகஸ்டு 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று ஜூலை 27-ந் தேதியே முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
முதல்-அமைச்சரின் அறிக்கையில் 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீரினைத் திறந்து விடுவதற்குப் பதிலாக, முதன் முறையாக முன்கூட்டியே 2011-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதியே அதாவது 6 நாட்களுக்கு முன்பே நீரினைத் திறந்து விடுமாறு ஆணையிட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.
2011-ம் ஆண்டு மே திங்கள் 13-ந் தேதி வரை தமிழகத்திலே ஆட்சிப் பொறுப்பிலே இருந்தது திமுக. ஜூன் மாதம் வரை அந்த ஆட்சியின் காலம் நீடித்திருந்தால் அப்போதும் தண்ணீர் திறந்துதான் விடப்பட்டிருக்கும்.
திமுக ஆட்சியில் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்திருந்த காரணத்தால்தானே, இவர்களால் ஜூன் 6-ந் தேதியே மேட்டூர் அணையைத் திறக்க முடிந்தது. இவ்வாறு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக 2011-2012-ம் ஆண்டு உணவு உற்பத்தியில் தமிழ்நாடு 101.52 லட்சம் மெட்ரிக் டன் அளவை எட்டிச் சாதனை படைத்தது என்றும், இதற்காக மத்திய அரசின் விருதும் தமிழகத்திற்குக் கிடைத்தது என்றும் முதல்-அமைச்சர் அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே, 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகளின் காரணமாகத்தான் அந்தப் பெருமை கிடைத்தது என்பதை மறைக்க முயற்சிக்கலாமா?.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான் காரணம் என்று பாராட்டிக் கொள்கிறவரைக் கேட்கிறேன்; 5-2-2007 அன்று நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வெளியானபோது, அந்தத் தீர்ப்பை அதிமுகவினரோ, ஜெயலலிதாவோ நல்ல தீர்ப்பு என்று ஏற்றுக் கொண்டார்களா?.
‘‘கருணாநிதியின் தொடர் துரோகச் செயலால்தான் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்குப் பாதகமாக வந்துள்ளது, இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று மைனாரிட்டி திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று ஜெயலலிதா அறிக்கை விட்டது உண்டா இல்லையா?.
‘‘இந்தியாவிற்கே முன்னோடியாக தனது தலைமையிலான தமிழக அரசு விளங்கி வருகிறது'' என்று மேட்டூர் அணை திறப்பு பற்றிய அறிவிப்பில் குறிப்பிட்டுக் கொண்டதாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட தானும், தனது அரசும்தான் காரணம் என்று அறிக்கையிலே கூறியதாலும், உண்மையில் என்ன நிலை என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான்; கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்திடும் கட்டாயத்திற்கு நான் ஆளாகி இதை எழுதியிருக்கிறேனே தவிர, யாரையும் குறைகூற வேண்டும் என்பது என் நோக்கமல்ல என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications