இந்த ஆண்டு தமிழக குடிமகன்கள் ரூ.21,680 கோடிக்கு குடித்து சாதனை
சென்னை: தமிழ்நாட்டில் 2012-2013 ஆண்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.21,680 கோடி ரூபாய் என்று தெரிவிக்கிறது புள்ளிவிபரம். "குடி குடியை கெடுக்கும்... ஆனால் அரசாங்கத்தை வாழவைக்கும்" என்று சொல்லாமல் சொல்கிறது இந்த புள்ளிவிபரம்.
கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழகத்திற்கு அதிக வருமானம் தரும் நிறுவனமாக உள்ளது டாஸ்மாக். இதன்மூலம் தமிழகத்தில் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது.
2003-04 -ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்டன முதல் நிதியாண்டில் அதன் வருமானம் 3 ஆயிரத்து 639 கோடி. ஆண்டுக்காண்டு வருமானம் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

பீர் குடிமகன்கள்
கடந்த 2003- 04 ஆம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை 2013- ஆம் ஆண்டில் 284 .29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது. மதுபானங்களின் விற்பனை 156. 61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

2 ஆண்டுகளில் இரு மடங்கு
டாஸ்மாக் மொத்த மது விற்பனை 2004-ம் ஆண்டு 4 ஆயிரத்து 72 கோடியாக இருந்தது. இது 2005-ம் ஆண்டு 6 ஆயிரத்து 30 கோடியாக விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது இரண்டாண்டுகளில் இருமடங்காக உயர்ந்தது.

10 ஆயிரம் கோடி
2006-ம் ஆண்டு 7 ஆயிரத்து 473 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. 2008-09-ம் ஆண்டில் மதுவிற்பனை 10 ஆயிரத்து 601 கோடியாக அதிகரித்துள்ளது.

ரூ.21,680 கோடியாக உயர்வு
2010-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியாக இருந்த மது விற்பனை 2011-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 965 கோடியாக உயர்ந்தது.
அடுத்த இரண்டாண்டுகளில் அதாவது 2012-13 ஆம் ஆண்டில் மது விற்பனை ரூ. 21 ஆயிரத்து 680 கோடியை எட்டியுள்ளது.
இப்போ சொல்லுங்க குடி... குடிமகன்களின் குடியை கெடுத்தாலும் அரசாங்கத்தை எப்படி வாழவைக்குதுன்னு?












Click it and Unblock the Notifications